The Social Science Collective

யாழ்பாணத்துச் சாதிய ஆதிக்க வடிவங்கள் எழுதியவர்: ராகவன்

Article

 

ragavan                                                                                                                                       ராகவன்

சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன் று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம்.

தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.

சாதியம் பண்டைய சமூகத்தின் எச்சசொச்சம். அது நிலப்பிரபுத்துவத்தின் வடிவம். நவீன சமூக பொருளாதார வளர்ச்சி சாதியத்தை இறுதியில் இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பார்வை இன்று கேள்விக்குறியாக எமக்கு முன் நிற்கிறது. அகதிகளாக அனைத்தையும் இழந்து வந்தவர்கள் கூட சாதியத்தை மட்டும் விடாமல் தூக்கிகொண்டு வருவது ஏன்? அல்லது நாடு கடந்து ஐரோப்பா அமெரிக்காவென்று வந்தவர்கள் சாதியை மட்டும் விடாமல் இருப்பது ஏன்? ஒரு புதிய சமூக பொருளாதார அரசியல் சூழலில் வாழ்பவர்கள் கூட சாதியத்தை கைவிடாமல் இருப்பதன் பின்னணி என்ன?

ஆனந்த் டெல்டும்ப்டே என்ற அறிஞர் கூறுகிறார், ’’1853இல் புகையிரத சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது சாதியத்தை உடைக்க போக்குவரத்து நவீனமயமாக்கல் உந்துசக்தியாகுமென்று மார்க்ஸ் எழுதினார். ஆனால் உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய புகையிரத சேவையை  இந்தியாவில்  அழியவில்லை. மாறாக சாதியானது நவீன வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து (adaptive) வருகிறது.’’

சாதியமானது நவீன மயமாக்கல், முதலாளித்துவ உலக மயமாதல் போன்ற அனைத்து வளர்ச்சிப் போக்குகளுடாக தன்னை தகவமைத்து புதிய வடிவங்களை எடுக்கிறது. சாதியம் ஒருபுறம் மாறுகிறது. மறு புறம் சாதியம் திரும்பவும் தளைக்கிறது. புதிய அவதாரங்களை எடுக்கிறது. சாதியத்தின் சமூக இருப்பை அங்கீகரிக்காமல் அதன் நேரடிமறைமுக ஆதிக்கத்தை உணராமல் ஒரு சமூக விடுதலை அல்லது குறைந்த பட்ச ஜனநாயக வாழ்வு சாத்தியமில்லை.

இலங்கையில் தெற்கிலும் வட கிழக்கிலும் சாதிய மேலாதிக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது. சாதியத்தின் நேரடி தாக்கம் அதன் இறுக்கம் பிரதேசங்களுக்கு இடையில் வேறுபட்டிருப்பினும் முழு இலங்கையிலும் ஏதோ ஒரு வகையில் சாதியத்தின் ஆதிக்கம் இருக்கதான் செய்கிறது. கண்டிய கிராமங்களை ஆய்வு செய்த நியூட்டன் குணசிங்க, இலங்கையில் பவுத்தமானது அதன் முற்போக்கு தன்மையை இழந்து இந்துத்துவ சிந்தனைமுறையான கர்மாவை தன்னகத்தே வரித்து முற்பிறப்பில் செய்த பலனே சாதியில் மேலோனாகவும் கீழோனாகவும் பிறப்பதற்கு காரணமென்ற சித்தாந்தத்தை தூக்கிப்பிடிக்கிறது என்கிறார்.. ரடல, கொவிகம ஆகிய ஆதிக்க சாதிகள் தங்களை உயர் சாதியென பிரகடனப்படுத்த இந்த சித்தாந்தம் முண்டுகொடுக்கிறது.

எனது கட்டுரை யாழ்ப்பாண சாதி அமைப்பை மட்டும் பேசுவதால் மற்றய பிரதேசங்களில் சாதிய அமைப்பு அதன் தாக்கம் பற்றி நான் இங்கு மேலும் எழுதவில்லை.

சாதியமானது மாறாத்தன்மை கொண்டு இருப்பதல்ல, அல்லது வர்ணாச்சிரம அடிப்படையை அச்சொட்டாக கடைப்பிடித்து ஆதியிலிருந்த அதே இறுக்கமான மரபுகளை கொண்டு இயங்குவதல்ல. மாறாக சாதியமானது தன்னை புதிய வடிவங்களுக்கேற்ப தகவமைக்கிறது, சாதிய ஏற்ற தாழ்வுகளை புதிய வடிவங்களில் பிரதிபலிக்கிறது. சாதிய அதிகாரத்தை அரசியல், சமய, கலாச்சார தளங்களில் நிலை நாட்ட புதிய கதையாடல்களை உருவாக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் யாழ்ப்பாணத்து வெள்ளாள சாதி. அது அரசியல் பொருளாதார சமய பண்பாட்டு தளங்களில் எவ்வாறு படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி சாதிய மேலாதிக்கத்தை யாழ்ப்பாண சமூகத்தில் உருவாக்கியது என்பதை பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் கி.பி. 3ம் நூற்றாண்டு காலத்தில் இருந்திருக்கின்றனர் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்த போதும் 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோழ படையெடுப்பு பின்னர் பாண்டியர் படையெடுப்பு காலப்பகுதிகளிலேயே வட கிழக்கில் இந்தியாவிலிருந்து தமிழரின் வருகையும் குடியிருப்பும் அதிகமானதென அரசரட்னம் போன்ற ஆய்வாளர்கள் கருத்து.

இக்காலகட்டத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்ட வெள்ளாள சாதி யாழ்ப்பாண பகுதிகளில் பெரும்பான்மையாக குடியேறினர். அவர்களுக்கு சேவகம் செய்யும் பல்வேறு சாதியினர் கொண்டு வரப்பட்டனர். இந்துக் கோவில்கள் இக்காலகட்டங்களில் கட்டப்பட்டு பிராமணர்கள் கோவில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டனர். இந்தியாவில் பார்ப்பனர்களுக்கிருந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகாரம் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மாறாக அவர்கள் வெள்ளாளரின் கோவில்களில் பூசகர்களாக அமர்த்தப்பட்டனர். சமய கருத்தியலே அரச அதிகாரத்தையும் சாதிய வேறுபாடையும் நியாயப்படுத்தியது. ஆனால் வர்ணாச்சிரம தர்மத்தின் படி சூத்திரராக வரையறுக்கப்பட்ட வெள்ளாளர் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஆதிக்க சாதியான பரிணாமத்தின் ஒரு வடிவம். மனு தர்மக் கோட்பாடு சூத்திரரான வெள்ளாருக்கும் பொருந்தியதே.

பார்ப்பனருக்கு மட்டுமே உரித்தான கன்னிகாதானம் போன்ற விவாக முறைகள் மற்றும் சமய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுதல் மனுதர்ம கோட்பாட்டின் புதிய வடிவம். வெள்ளாளர் பார்ப்பன மயமாகுதல் ஒரு புறமிருக்க, மறு புறத்தில் பார்ப்பன ஆதிக்க கலாச்சார தளத்தை எவ்வாறு யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் தம்வசப்படுத்தினர், அதற்கான ஆதிக்க கருத்தியல் ஆறுமுக நாவலரால் எவ்வாறு உருவாக்கபட்டது என பின்னர் பார்ப்போம்.

மன்னராட்சி காலத்தில் வெள்ளாளர்களில் பெரும்பாலாலோர் முதலியார், உடையார், விதானையார் போன்ற பதவிகளில் அமர்த்தப்பட்டு அந்த பதவிகள் அவர்களது பிறப்புரிமையானது. முதலியார், உடையார் நில உடைமையாளர்களாக மட்டுமல்ல அரசியல், சமூக விடயங்களில் ஆளுமை செலுத்தியவர்களாகவும் இருந்தனர். மதமானது மன்னர் ஆட்சியையும் சமூக ஏற்றத் தாழ்வையும் கர்மா என்ற கோட்பாட்டின் மூலம் நியாயப்படுத்தியது. சாதி அடிப்படை முற்பிறப்பின் பாவ புண்ணியங்களின் அளவு கோலாக அமைந்தது.

பொருளாதார தளத்தில் வெள்ளாள சாதியின் நில உடைமை மற்றும் உற்பத்தி உறவுகள் தேசவழமை சட்டத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டன. தேசவழமை உற்பத்தி உறவுகளை நிர்ணயித்த அதே வேளை ஒவ்வொரு சாதியினரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் அவர்கள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்ற வரைமுறைகளையும் தீர்மானித்தது. தேசவழமையானது சாதிய உறவு முறையை ஒழுங்கமைத்தது. மன்னர் காலத்தில் இது சட்டக்கோர்வையாக இல்லாவிடிலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்தது. அக்கால தேசவழமை அடிப்படையில் மேலாதிக்கம் செலுத்திய வெள்ளாள சாதியினது உடைமைகளை, சலுகைகளை பாதுகாத்தது. வெள்ளாளருக்கு அடிமையாயிருந்த பள்ளர், பறையர் போன்ற தலித் மக்கள் வெள்ளாளருக்கு பணிபுரிதல் அவர்களை வாங்கி விற்கும் உரிமை போன்ற மிக பிற்போக்கான அநாகரிக வழிமுறைகளின் மூலம் வெள்ளாளரின் மேலாதிக்கத்தை பாதுகாத்து தலித் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தது.

அத்துடன், ஒவ்வொரு சாதிக்குமான வரைமுறைகள், அவர்களது கலாச்சார நடைமுறைகள் பற்றியும் தேசவழமை நிர்ணயித்தது. ஒவ்வொரு சாதியினரின் திருமண சடங்குகள் எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதைக் கூட தேசவழமை தீர்மானித்தது. ஒருவகையில் மனு தர்ம சித்தாந்தத்தை புதிய சூழல்களுக்கேற்ப தகவமைத்த வடிவமே தேசவழமை எனலாம். பார்ப்பனர்கள் ஆன்மீக தளத்தில் உயர்ந்த இடத்தை கொண்டிருப்பினும் ஆன்மீக ஆதிக்கம் கோவில் மதில்களுக்குள் குறுகியிருந்ததெனலாம். சமஸ்கிரித சுலோகங்களை கடவுள் முன் ஒப்புவிக்கும் பாத்திரத்தை மட்டும் இலங்கைப் பார்ப்பனர்கள் எடுத்திருப்பினும் தமது சாதிய மேன்மை, தமது பிறப்பினால் ஆனது என்ற சிந்தனை போக்கை அவர்கள் கைவிடவில்லை.

எனினும் அரசியல் பொருளாதார கலாச்சார தளங்களில் இந்திய பார்ப்பனர்கள் போல் இலங்கை பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அவர்களின் சனத்தொகை மிக சொற்ப அளவாக இருந்தது மட்டுமல்ல அவர்கள் கோவில் பூசாரிகளாக இறக்குமதி செய்யப்பட்டதால் அவர்களது பரம்பரையினர் பெரும்பாலும் தொடர்ந்து பூசாரிகளாக இருந்து வரும் ஒரு நிலையை தோற்றுவித்தது. இன்நிலையில் ஆதிக்க சாதியாக வெள்ளாளர் உருவெடுத்தனர்.

முதலியார், உடையார், தலையாரி போன்றவர்களே மன்னராட்சி காலங்களில் மன்னர்களின் உள்ளூர் பொறுப்பாளர்களாக இருந்து வரி அறவிடுதல் போன்ற விடயங்களுக்கு பொறுப்பாக இருந்தனர். எனவே கிராம மட்டங்களில் இவர்கள் அரசியல் பொருளாதார கலாச்சார அறிவுத் தளங்களில் மேலாதிக்கம் செலுத்தினர். சமயம், சட்டம் போன்றவை சாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி முண்டு கொடுத்தன. கிராம தலைவர்களாக இருந்த ஆதிக்க சாதிகள் இந்த ஏற்றதாழ்வான சட்டமுறைகளையும் சமய விதிகளையும் அடிப்படையாக கொண்டு கிராம பிரச்சனைகளை தீர்த்தனர். எனவே சாதிய ஆதிக்க கருத்துருவின் அறிவுசார் தளத்தின் தலைவர்களாகவும் இவர்கள் இருந்து மன்னர் ஆட்சி, சாதி முறை ஆகியவற்றை பண்பாட்டுத் தளத்தில் நியாயப்படுத்தினர்.

கிராம்சியின் கருத்தில் சொல்வதன்றால் ஓர் இணக்கப்பாட்டை (consent) சமூகத்தில் நிலை நாட்டும் பாரம்பரிய அறிவாளர்களாக (traditional intellectuals) தொழிற்பட்டனர். ஒருவகையில் தலித் மக்கள் தமது அடிமை நிலைக்கான காரணம் முன்வினைப் பயன் என்பதும், குறிப்பிட்ட சாதியில் பிறந்தது தமது விதியென்றும் நம்புவதற்கான வலுவான கலாச்சார ஆதிக்க தளம் (cultural hegemony) சாதிய சமூகத்தை ஒழுங்கமைக்கும் விதியானது.

தலித் மக்கள் இந்த கலாச்சார ஆதிக்க கருத்தியலை அப்படியே விழுங்கிக் கொண்டார்கள் என்பது இதன் பொருளல்ல. பல்வேறு எதிர்ப்புகளும் முரண்பாடுகளும் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாம். இந்த எதிர்ப்புகள் வன்முறை மூலம் நசுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆதிக்க கருத்தியலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியலுக்கான அரசியல் கலாச்சார தளம் அக்காலகட்டத்தில் உருவாக வில்லை என்பது யதார்த்தம். இன்னொரு வகையில் அக்கால மன்னர் ஆட்சியானது நிர்வாக ரீதியாக மத்தியத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. கிராமங்களின் நிர்வாக அலகுகளை உள்ளூர் முதலியார்களும் உடையார்களும் நிர்வகித்தனர். அரசனின் திறைசேரியை நிரப்புவதற்கான வரிகள் கிராமங்களிருந்து செல்வதை கண்காணித்ததை தவிர வேறு விடயங்களில் அரச நிர்வாகம் தலையிடவில்லை எனலாம். எனவே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாற்று சிந்தனை முறை கலாச்சார தளத்தில் வருவதற்கான வாய்ப்புகளோ இருப்பதற்கான சூழல் அரிதாகவே இருந்ததென கொள்ளலாம்.

எனவே மன்னராட்சி காலகட்டங்களில் ஆதிக்க சாதி கருத்தியலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியல் குறைந்தபட்சமாவது ஆளுமை செலுத்திய தென்பதற்கான வரலாற்றுத் தடயங்கள் இருப்பதாக தெரியவில்லை.

சாதியத்தின் இறுக்கமான வேர்களை கேள்விக்குள்ளாகும் நிலையும் அதற்கெதிரான பல்வேறு போராட்ட வடிவங்களும் காலனித்துவ காலங்களில் உருவானதென்பது மிகையல்ல. இதற்கான பல்வேறு காரணிகள் உள்ளன. போத்துக்கேயர், டச்சுகாரர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலங்களில் சாதியத்திற்கெதிரான எதிர்ப்புகள் கிளம்பவில்லை. வெள்ளையர்கள் மனித சமூகத்தில் உயர் நிலை கொண்டவர்கள் என்ற நிறவாத கருத்தியல் காலனித்துவ ஆட்சியை நியாயப்படுத்தியது.

கருப்பின மக்களை அடிமையாக்கி வியாபாரம் செய்து தங்கள் மூல தனத்தை விருத்தி செய்த காலனித்துவ வாதிகள் யாழ்ப்பாண சாதிய முறைக்கெதிராக செயற்படவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. வரிகளை வசூலிப்பதற்கு ஏற்கெனெவே நிலைத்திருந்த சாதிய அடுக்குமுறை சாதகமாக இருந்தது மட்டுமல்ல, நிறவாத கருத்தியலும் சாதிய கருத்தியலும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருந்தன. பிறப்பால் வெள்ளையன் உயர்ந்தவன் என்ற அதே சிந்தனை முறையின் அடுக்கில் ஆதிக்க சாதி தன்னை அடுத்த படியில் வைத்துகொண்டது.

அதே முதலியார்களும் உடையார்களும் போர்த்துகேய டச்சு ஆட்சி காலப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர். தங்கள் பெயர்களுக்கு முன் ஐரோப்பிய பெயர்களை வேறு பதித்து கொண்டனர் (தென் பகுதிகளிலும் இது நிகழ்ந்தது).

1707ஆம் ஆண்டு தேச வழக்காயிருந்த தேசவழமை சட்டம் டச்சுகாரரால் அச்சு வடிவம் கொடுக்கப்பட்டு அரச அங்கீகாரம் பெற்ற விடயம் சாதியத்திற்கான புதிய பரிமாணத்தை கொடுத்தது. இந்த சட்டமானது 12 முதலியார்களால் பரிசீலிக்கப்பட்டு சட்டமூலமாக்கப்பட்ட விடயம் ஒரு ’சாதிய’ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளூர் சமூக நடைமுறைகள் வழக்கங்களை மாற்றினால் அங்கு சமூக கொந்தளிப்பு ஏற்படும்; அது காலனித்துவ ஆட்சிக்கு குந்தகமாக அமையும்; எனவே உள்ளூர் வழமைகளை தொடர்ந்து பேணுவது அவசியம் என்பதை டச்சுக்கார அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சாதிய அடுக்கு முறையும் காலனித்துவ நிறவாத சிந்தனையும் எவ்வாறு ஒத்தோடின என்பதற்கு தேசவழமை சட்டமூலமாக்கப்பட்ட்மை சிறந்த உதாரணம்.

தேசவழமை சரத்து இல.5 (1869) – 4 ( தற்போது நடைமுறையில் இல்லை) இவ்வாறு கூறுகிறது: “இம்மாகாணத்தின் உரித்துகள் உரிமைகள் சம்பந்தமான முடிவுகளானது இம்மாகாணத்தில் தொன்று தொட்டு கடைப்பிடித்துவரும் வழமைகள், நடைமுறைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். இந்த உரித்தும் உரிமையும் உயர்சாதியினருக்கும் குறிப்பாக வேளாளருக்கும், தாழ்ந்த சாதியினருக்கும் –குறிப்பாக பள்ளர், நளவர், கோவியர் போன்றாருக்கும் இடையே நிலவும் உறவு முறையிலிருந்தே எழுகிறது“.

தேசவழமை சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்றது, சாதிய அடுக்குகளை பலப்படுத்துவதற்கான நவீன வடிவத்தை பெற்றது மட்டுமல்ல காலனித்துவ அரசுகள் தமது நிர்வாகத்தை பலப்படுத்தும் பொருட்டு சாதிய பிரிவுகளின் எண்ணிக்கை, மதிப்பீடுகள் எடுத்தது சாதியத்தின் இருப்புக்கான –நவீன வடிவத்தை கொடுத்தது. அச்சுப் பதிப்புகள் ஆகிய நவீனத்துவ முறைகள் சாதியத்தின் இருப்பையும் வீச்சையும் மேலும் வலுப்படுத்தின. எனவே நவீனத்துவத்தின் மூலம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் இருப்பு அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு தளத்திலும் மீளுறுதி செய்யப்பட்டது.

பிரித்தானிய காலனித்துவகால கட்டத்தில் ஆட்சியாளர்கள் சாதிய அடுக்குகளை தொடர்ந்து தேசவழமை போன்ற சட்டங்களால் பேணினாலும் பிரித்தானிய காலனித்துவம் வணிக முதலாளித்துவத்திலிருந்து கைத்தொழில் முதலாளித்துவமாக 19ஆம் நூற்றாண்டு பகுதிகளில் மாறிய காலகட்டங்களில் பல்வேறு நவீன சிந்தனைகளையும் மாற்றங்களையும் படிப்படியாக ஐரோப்பாவிலும் காலனித்துவ நாடுகளிலும் தோற்றுவித்தது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் சம உரிமை, ஜனநாயகம், சமத்துவம் மனித உரிமை, மதச்சார்பின்மை, சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் போன்ற நவீன கருத்துக்கள் காலனித்துவ நாடுகளிலும் பரவின. அத்துடன் இந்திய தேசிய விடுதலை போராட்டம், ரஸ்ய புரட்சி போன்ற விடயங்கள் ஆதிக்கத்திற்கெதிராக போராட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தன. இந்த கருத்தியல்களின் தாக்கம் இலங்கையிலும் நிகழ்ந்தது. இக்காலப் பகுதிகளில் இலங்கைக்கான சுதந்திர அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்க அமைப்புகளினதும் இடதுசாரி அமைப்புகளினதும் தோற்றம் காலனித்துவத்திற்கு எதிரான குரல்களாக மட்டுமல்ல சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராகவும் எழுந்தன.

ஆனால், 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் ஆறுமுக நாவலர் ஆன்மீக கருத்தியல் தளத்தில் வெள்ளாளருக்கான இடத்தை பதித்தது மிக முக்கியமான விடயம். அறிவாளர்கள் ஒரு தனி வர்க்கமல்ல. மாறாக ஒவ்வொரு வர்க்கமும் தனது அறிவாளர்களை உருவாக்கின்றதென்பார் கிராம்சி. இந்த வகையில் ஆறுமுக நாவலர் வெள்ளாள சாதியினரின் படைப்பே. கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக அதே வழிமுறையை பயன்படுத்தி சைவப் பாடசாலைகளை உருவாக்கினார். காலனித்துவத்துக்கெதிராக குரல் கொடுத்தார். பாட்டுத் தமிழை வசன நடையாக்கினார் என்ற கதையாடல்களுக்கப்பால் ஆறுமுக நாவலர் வெள்ளாள சாதியினரின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அறிவாளராக இருந்தார் என்பதே உண்மை.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிரிதம் போன்ற மொழிகளில் புலமை மிக்க நாவலர் மிகுந்த உழைப்பாளி. தனது சாதியினரின் மேலாதிக்கத்தை நிலை நாட்ட அயராது உழைத்தவர் என்ற வகையில் வெள்ளாளர் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்பது ஆச்சரியமல்ல. ஆறுமுக நாவலரின் மிக முக்கிய பாத்திரம் மனு தர்ம சித்தாந்தத்தை வெள்ளாள மயப்படுத்தி சைவ சித்தாந்தமாக்கியதே. ஆறுமுக நாவலர் மிக எளிமையாக தமிழில் எழுத வல்லவர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர். அத்துடன் அச்சுப் பதிப்பு முறையை தனது கருத்துக்கள் பரவ முக்கிய துணையாக எடுத்தவர்.

மனுதர்ம சாத்திரத்தின் வர்ண அடிப்படையில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வணிகர்கள் என வரிசைக் கிரமமாக முன்னிலையில் நிறுத்தப்பட்டு சூத்திரர்கள் வர்ண முறையில் நான்காவது இடத்தில் வைக்கப்பட்டனர். சூத்திரரின் உயர்ந்த பணி பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்பவதே என்கிறது வர்ண முறை. ’அவர்ணர்’ என மனுசாத்திரம் வர்ணிக்கும் தலித்துகள் இந்த வர்ண முறைக்குள் அடக்கப்படாமல் தீண்டத்தகாதவர்களாகவும் சமூகத்தில் எவ்வித மதிப்போ மரியாதையோ இன்றி சமூகத்திலிருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டு மிக கொடிய சமூக வன்முறையை சந்தித்து வந்தனர்; வருகின்றனர்.

நாவலர் சூத்திரரான வெள்ளாளரை சைவ சித்தாந்த முறைப்படி தூய்மைப்படுத்தும் கருத்தியலை மேற்கொண்டு வெற்றியும் கண்டார். நாவலரின் சைவ வினா விடை மனுதர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே. நாவலர் சைவசமயிகளை ஆதிசைவர், மகாசைவர், அநுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகையாக பிரிக்கிறார். இங்கு அவாந்தர சைவராக வரிசைப்படுத்தப்படும் சூத்திரர் சிவதீட்சை மூலம் தெய்வீகப்படுத்தப்படும் முறையை நாவலர் அறிமுகப்படுத்துகிறார். இது மனு சாத்திரத்தின் சிந்தனைமுறையை கையாண்டு சூத்திரரான வெள்ளாளர் ஆன்மீக தளத்தில் உயர்த்தப்பட்ட விடயமே.

ஆசாரியர்கள் ஆவதற்கான தகுதி நான்கு வர்ணத்தாருக்கும் உள்ளதென சைவ வினா விடை போதிக்கிறது. நாவலர் சொல்கிறார், ‘’பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், க்ஷத்திரியர், க்ஷத்திரியர் முதலிய மூன்று வருணத்தாருக்கும் வைசியர், வைசியர் முதலிய இரண்டு வருணத்தாருக்கும், சூத்திரர், சூத்திரருக்குஞ் சங்கர சாதியருக்கும் ஆசாரியராகலாம். இந்நியமங் கிரியாகாண்டத்தின் மாத்திரமேயாம்; ஞான காண்டத்திலோ வெனின், நான்கு வருணத்துள்ளும் உயர்ந்த வருணத்தாருக்குத் தாழ்ந்த வருணத்தாரும் ஆசாரியராகலாம்.’’

ஆசாரியாக யோக்கியதை இல்லாதவர் யார் என்பதற்கு நாவலரின் பதில்: “நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன், எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை, களவு முதலிய தீயொழுக்கமுடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்)”

மனு சாத்திரத்தில் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் ஆசாரிகளாவதென்பது கொல்லத்தகுந்த குற்றம். ஆனால் வெள்ளாளர் பார்ப்பனர்களுக்கும் ஆசாரியாகலாம் என்ற நாவலரின் புதிய வரைவிலக்கணம் வெள்ளாளருக்கு ஆன்மீக கலாச்சார தளத்தில் உயர்ந்த ஸ்தானத்தை கொடுத்தது. ஆனால் தலித் மக்கள் சைவராக இருப்பினும் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு ஆன்மீக கலாச்சார தளத்தில் இடமில்லை.

அது தவிர, சிறு தெய்வ வழிபாடு போன்ற சமய நடவடிக்கைகளை எதிர்த்ததன் மூலம் நாவலர் வெள்ளாளருக்கான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சமய கலாச்சார மேலாதிக்கத்தை உருவாக்கினார். சைவ ஆகம மயப்பட்ட சமயாசாரங்கள், விரதங்கள் போன்றவை இந்தியாவை விட அதிகப்படியாக யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடர்வதற்கு நாவலரின் நவீனத்துவ சைவ வழிமுறை அடிப்படை.

நாவலரின் பங்கு வெள்ளாளரின் சாதிய தூய்மையாக்கலுடன் சேர்ந்து கலாச்சார தளத்தில் அவர்களுக்கான புதிய அந்தஸ்தை கொடுத்தது. தேசவழமை காலனித்துவ காலத்தில் சட்டமூலமாகி வெள்ளாளரின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை வலுப்படுத்தியதும் கலாச்சார தளத்தில் வெள்ளாளர் ஆன்மீக அந்தஸ்து அடைந்ததும் வெள்ளாளரின் அரசியல் சமூக அந்தஸ்தை மேலும் உரமாக்கியது. வெள்ளாளருக்கு அரசியல் ஆட்சி உரிமை காலனித்துவ காலத்தில் இருக்கவில்லை யெனினும் அரசியல், சட்ட, நிர்வாக துறைகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

நாவலரின் பாத்திரமானது கிராம்சியின் மொழியில் வினைத்திறனான அறிவாளரின் (organic intellectual)பாத்திரமாகும். பாரம்பரிய அறிவாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள் எனும் நினைப்பில் இருப்பவர்கள். உதாரணமாக மதகுருக்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தில் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் . இவர்கள் பாரம்பரிய சமூக பாத்திரத்தை வகிப்பவர்கள். மாறாக வினைத்திறனான அறிவாளர்கள் குறிப்பிட்ட சமூக குழுவின் அபிலாசைகளை இயல்பாக முன்னெடுப்பவர்கள். அதன் சிந்தனை மற்றும் ஒழுங்கமைப்பின் பங்காளர்கள். காலனித்துவ ஆட்சியில் வெள்ளாள இந்து மேலாண்மைக்கு வந்த நெருக்கடி நிலைக்கெதிரான ஒழுங்கமைப்பாளராக கலாச்சார அறிவியல் தளங்களில் நாவலர் செயல்பட்டார் என்பது மிகையல்ல. இவரது அறிவாளர் பாத்திரம் தலித் மக்களை முற்றாக புறம் தள்ளி ஆதிக்க சாதியினருக்கு அடிமையாயிருக்கும் நிலையை நவீன சைவ சனாதன முறையூடாக நியாயப்படுத்தியது. இதற்கான செயல்பாடுகளை கல்வி சமய ஆசாரம் பிரசங்கம் மற்றும் பரப்புரை போன்ற கலாச்சார தளங்களில் நாவலர் முன்னெடுத்தார்.

அத்துடன் காலனித்துவ காலத்தில் சாதிய ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதிக்க சாதியினரான வெள்ளாளருக்கு தாங்கள் பெரும்பான்மை என்ற பலத்தை மட்டுமல்ல மற்றைய சாதியினர் குறிப்பாக தலித் மக்கள் தாம் அரசியல், பொருளாதார, கலாச்சாரத் தளங்களில் புறம் தள்ளப்பட்டவர்கள் மட்டுமல்ல எண்ணிக்கையிலும் குறைந்தவர்களென்ற நிலைக்கும் தள்ளபட்டிருக்கலாம்.

காலனித்துவ கல்விமுறை மூலம் பயனடைந்தவர்கள் ஆதிக்க சாதிகளே. தலித் மக்கள் கல்வி கற்கும் உரிமை உட்பட பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த காலமது. வீதியில் நடப்பதிலிருந்து குடிக்கும் நீர் உடுக்கும் உடை வரை தலித்துகளுகான பல்வேறு விதிமுறைகளை ஆதிக்க சாதியினர் அமைத்திருந்தனர். தலித் ஒருவர் இறந்த பின் அவரை அடக்கம் செய்வது கூட எப்படி என்பதை இந்த விதிமுறை கொண்டிருந்தது. பாடசாலைக்கு செல்ல பிற்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அவர்கள் நிலத்தில் அமர்ந்தே படிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

எனவே வெள்ளாளரின் ஆதிக்கம் அரசியல், கல்வி, சமயம், பொருளாதாரம் ஆகிய பல்வேறு தளங்களில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. காலனித்துவ காலத்தில் ஆதிக்க சாதிய கருத்தியலும் நடைமுறையும் சூழலுக்கேற்ப தகவமைத்து கொண்டது மட்டுமல்ல காலனித்துவ, நிறவாத சிந்தனைக்கூடாக ஆதிக்க சாதியம் தன்னை அடையாளப்படுத்தவும் செய்தது. இதற்கான கலாச்சார தளம் –நாவலர் போன்றவர்களால் வலுவாக்கப்பட்டது.

காலனித்துவத்திற்கு எதிரான அரசியல், சமூக எதிர்ப்புணர்வுகள் எழுந்த காலகட்டமான 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஆதிக்க சாதிய கருத்தியலும் நடைமுறையும் ஏற்கெனவே வலுக்கொண்டிருந்தது ஒரு முக்கிய வரலாற்று போக்காகும்.

வெள்ளாளர் என்பது பிறப்பால் மட்டும் உருவானதல்ல. காலப்போக்கில் அகம்படியார், செட்டி, தனக்காரர் போன்ற பல்வேறு ஆதிக்க சாதிகள் இணைந்து வெள்ளாளர் என்ற ஒரு பரந்த சாதிய பிரிவினுக்குள் அடங்கினர் என்கிறார் அரசரட்னம். வெள்ளாளருக்குள் பல உப பிரிவுகள் இருப்பினும் தலித் மக்களுக்கெதிரான செயல்பாடுகளில் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வெள்ளாளர் என்ற பொது அடையாளம் அவர்களை ஒன்றிணைத்தது. அதுமட்டுமல்ல வெள்ளாளர் என்ற பரந்த அடையாளம் எண்ணிக்கை ரீதியிலும் ஆதிக்க சாதிக்கான பலத்தை கொடுத்தது.

ஒருவகையில் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய விடுதலைக்கு இன, சாதிய, சமய பிரிவினைகள் தடையாக இருக்குமென்ற சிந்தனை போக்கு ஆரம்பத்தில் இருந்த போதும் ஆதிக்க சாதிய கருத்தியலே சமூகத்தில் வேரூன்றி இருந்தது.

1920களில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இன, மத, சாதிய வேறுபாடுகளை எதிர்த்து காந்திய சிந்தனை முறையை வரித்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான குரலை கொடுத்திருப்பினும் அது ஒரு வலுவான கருத்தியலாக வளர விடாமல் தடுப்பதில் ஆதிக்க சாதிகள் கவனமாக இருந்தனர். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சம பந்தி, சம போசனம், பாடசாலை அனுமதி என்ற மூன்று விடயங்களை மூலமாக கொண்டு தனது தீண்டாமைக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டது. காந்தி, பெரியார், நேரு போன்றவர்களின் யாழ்ப்பாண வருகை காலனித்துவத்திற்கு எதிரான போராட்ட சிந்தனையை பரவ செய்தது ஒருபுறம் இருக்க, பழமைவாத வெள்ளாள ஆதிக்கத்திற்கெதிரான சாதிய எதிர்ப்பு கருத்தியலையும் உருவாகியது.

1927ல் உருவான ஒடுக்கப்பட்ட தமிழ் தொழிலாளர் சங்கம் (Forum for Depressed Class Tamil Labourers) சாதியத்துக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்தது.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் சாதிய எதிர்ப்பு கருத்தியல் மற்றும் ஒடுக்கப்பட்ட தமிழ் தொழிலாளர் சங்க போராட்டங்க்கள் பழமைவாத வெள்ளாள ஆதிக்க சாதி கருத்தியலுக்கு சவாலாக இருந்தது. இந்த வரலாற்று நெருக்கடியை ஆதிக்க சாதி எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆதிக்க வர்க்கத்தின் பாத்திரம் தேக்க நிலையடைந்து. அதன் கருத்தியல் தளம் குறுக்கப்படும் நெருக்கடி நிலை வரும் போது அது வன்முறையை கையிலெடுக்கும் என்கிறார் கிராம்சி. இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொள்ள 1930களில் ஆதிக்க சாதியினர் தலித்துகள் படிக்கும் பாடசாலைகளுக்கு தீமூட்டினர். தலித் மக்கள் மேல் வன்முறை ஏவப்பட்டது. மறுபுறம் இராமநாதன் தமிழ் ஆதிக்கசாதிக்கான அரசியல் கருத்தியல் தலைமையை கொடுத்தார். பாடசாலைகளில் சம உரிமை என்ற கருத்துக்கு எதிராக சாதிய ரீதியாக பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அத்துடன் சர்வசன வாக்குரிமை ஆபத்தானது. அது தலித்துக்கள், படிப்பறிவற்றவர்கள் தலைமையை கைப்பற்ற வழிவகுத்து சமூக கட்டமைப்பை சீர்குலைக்குமென வாதித்தார். இராமநாதன் ஆறுமுகநாவலரின் கருத்தியல் மேலாண்மையின்வடிவமாகி தலித் மக்களை முற்றாக புறம் தள்ளும் சிந்தனை போக்கிற்கு தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாண வாலிபர் சங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய நிலை பழமைவாத கருத்தியலுக்கான எதிர்சவாலாக இருந்த நெருக்கடியை ஆதிக்க சாதி தலைமை பல்வேறு தளங்களில் வன்முறை மூலமாகவும் ஆதிக்க கருத்தியல் மூலமாகவும் எதிர்கொண்டது. வெள்ளாளர் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள நிலையும் அதற்கு அனுகூலமாக இருந்ததெனலாம். யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் வீழ்ச்சிக்கு சாதிய ஆதிக்க கருத்தியலின் வீச்சு ஒரு முக்கிய காரணி எனலாம். யாழ்ப்பாண வாலிபர் சங்கம் சர்வசன வாக்குரிமைக்கு ஆதரவாக இருந்தனர். அதே வேளை இனரீதியான பிரதி நித்துவம் என்ற நிலைப்பாட்டை பழமைவாத தலைமை எடுத்தது. 1920களில் முதலாவது மகாயுத்தம் மற்றும் பிரித்தானியாவில் தொழிலாளர் கட்சியின் வருகை ஆகிய விடயங்கள் காலனிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வழி கோலியது. இதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டன.

1931ல் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு வந்தபோதும் இராமநாதன், பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமை யாழ்ப்பாண சாதிய பழமைவாதத்தை நிலை நாட்டி வெற்றி கொண்டன. சர்வசன வாக்குரிமைக்கு மாறாக இனரீதியான பிரதி நித்துவம் என்ற கோட்பாடு தமிழ்த் தலைமையால் முன்வைக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க சுயராச்சிய கோரிக்கையை முன்வைத்து தேர்தலை பகிஸ்கரிக்க யாழ்ப்பாண் வாலிபர் சங்கம் அழைப்பு விட்டதற்கெதிரான செயல்பாடுகளை தமிழ் பழமைவாத தலைமை முன்னெடுத்தது. வாலிபர் காங்கிரஸ் கூட்டங்கள் குழப்பபட்டு ஒரு கூட்ட பந்தல் தீக்கிரையாக்கப்பட்டது. 1934ல் வாலிபர் சங்கம் முற்றாக செயலிழந்து பழமைவாத தலைமை வெற்றிகொண்டது. இது சாதிய மேலாதிக்கத்திற்கான வெற்றியே.

ஆனாலும் ஆதிக்க சாதியத்திற்கு எதிரான தலித் அமைப்புக்களின் உருவாக்கங்களும் செயல்பாடுகளும் தொடர்ந்தன. 1943ல் சிறுபான்மை தமிழர் மகாசபையின் உருவாக்கமும் தலித் மக்களுக்கான தனி பிரதிநித்துவ கோரிக்கைகளும் தமிழ் பழமை வாத சாதிய தலைமையை அவர்களது தளத்திலேயே எதிர்கொண்டன. தலித் மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை பாரம்பரியம் என்ற பேரில் இழைத்து வந்து, அதனை வெட்கமின்றி நியாயப்படுத்திய இத்தலைமை, தமிழர் என்ற ஒருகுடைக்குள் தலித் மக்களை இன ரீதியான பிரதிநித்துவ கோரிக்கைக்குள் அடக்க முயன்றபோது தலித் மக்கள் ’தமிழர்கள்’ என்ற பெரும் கதையாடலுக்குள் அடங்க மாட்டார்களென, தனிப் பிரதிநித்துவ கோரிக்கையை முன்வைத்தது மகாசபை.

மகாசபையினதும் மற்றும் தலித் இயக்கங்களினதும் மாற்றுக் கருத்தியலுக்கும் ஆதிக்க சாதியினரின் ஆதிக்க கருத்தியலுக்குமான போராட்டகளமாகவே யாழ்ப்பாணம் இருந்திருக்கிறது; இருந்து வருகிறது. இந்த வரலாற்று போக்கில் ஆதிக்க சாதிய கருத்து நிலை சமூக சூழலுக்கு தக்கவாறு தன்னை தகவமைத்துத் கொள்வதன் மூலமும் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்வதன் மூலமும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து பேணி வருகிறது.

1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அரசியல் சூழலில் யாழ்ப்பாண பழமைவாத தலைமைக்கு இரு விதமான நெருக்கடிகள் உருவாகின. ஒருபுறம் தமிழ் பழமைவாத தலைமையும் ஆதிக்க சாதியும் காலனித்துவ காலங்களில் அனுபவித்து வந்த அதிகாரங்களும் சலுகைகளும் சிங்களப் பெரும்பான்மை அரசியல் பரப்பில் படிப்படியாக குறைந்துவரும் நிலை தோன்றியது. மறுபுறம் தலித் மக்களின் விழிப்புணர்வும் போராட்டமும் பழமைவாத தலைமக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. ஏனெனில் அவர்களது தலைமை ஆதிக்க சாதியின் நலங்களை மட்டும் பிரதிபலிப்பதாக இருந்ததே. சிங்கள பெரும்பான்மை அதிகாரம் கொவிகம, ரடல சாதியினரின் அதிகாரமாகவே இருந்து வருகின்ற தென்பது யதார்த்தமெனினும் பழமைவாத அரசியலுக்கு தலைமை தாங்கிய இலங்கை காங்கிரஸ் கட்சிக்கு அவ்வாறான அரசியல் அதிகாரத்தை பெற முடியவுமில்லை. தலித் மக்களை தங்களுடன் இணைக்கும் குறைந்த பட்ச காந்திய வழிமுறையான ’ஹரிஜன் சிந்தனை’கூட அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

இந்த நெருக்கடியின் உருவாக்கமே தமிழரசு கட்சி. தென்னிலங்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்திற்கும் தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. 1949ல் தமிழரசு கட்சியும் 1951ல் சுதந்திர கட்சியும் பழமைவாத காங்கிரசிலும் யூ.என்.பி.இலும் இருந்தும் பிரிந்து வந்த கட்சிகள். இவை தமது அரசியல் செயற்திட்டத்திற்கான கருத்தியலாக மக்களை வசீகரிக்கும் கருத்துகளை வைத்தனர். சுதந்திரக் கட்சி பரந்துபட்ட சிங்கள மக்களை வசீகரப்படுத்தும் ஜனரஞ்சக அரசியல் கருத்தியலையும் தமிழரசுக் கட்சி பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களை வசீகரப்படுத்தும் ஜனரஞ்சக (polulist) கருத்தியலையும் முன்வைத்து வெற்றி கொண்டன. ஆனால் இரண்டு கட்சிகளும் ஆதிக்க சாதி அதிகாரத்தை அரசியல் கலாச்சார தளங்களில் எதிர்கொள்ள தயங்கின. மாறாக ஒரு சமரச நிலையை முன்னெடுத்தன. எனவே சாதிய கருத்தியலான ஆறுமுக நாவலரின் சைவ ஆகமத்தை மறுதலித்து

தமிழரசு கட்சித்தலைமை அடிப்படையில் ஆதிக்க சாதிகளின் நலன்களுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் தனது அரசியல் அபிலாசைகளை அடைய சாதிய ஆதிக்க பழமைவாத போக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதென அடையாளம் கண்டது. அதுமட்டுமல்ல வெளிப்படையான சாதிய ஆதிக்க அரசியல் தமிழர் என்ற பொது அடையாள அரசியல் முன்னெடுப்புக்கு துணை போகாது என்பதையும் தலித் மக்களின் சில உரிமைகள் மறுக்கப்படும் வரை தமிழ் அரசியல் பரப்பில் அவர்கள் இணைக்கப்படுவது சாத்தியமல்ல என்பதையும் தமிழரசுக் கட்சியினர் உணர்ந்திருந்தனர். சாதியம் மட்டுமல்ல பிரதேசம், மதம், அனைத்துக்கும் அப்பால் தமிழ் பேசும் மக்கள் என்ற மொழியால் இணைந்த மக்கள் கூட்டத்தின் ஆதரவு தமது அரசியல் இருப்புக்கு அவசியம் என்பது தமிழரசுக் கட்சி ஏதோ திட்டம் போட்டு தீர்மானித்த விடயம் அல்ல. மாறாக அந்த அரசியல் சமூக சூழலில் ஒரு குறிப்பிட்ட சாதிய/வர்க்க அபிலாசைகளை பிரதிபலிக்க எழுந்த ஒரு சமூக வெளிப்பாடே பரந்து பட்ட தமிழ் அடையாள அரசியல்.

இந்த வரலாற்று போக்கில் இலங்கையில் 1957ல் சட்டமாக்கபட்ட சாதியத்திற்கெதிரான சமூக குறைபாட்டு தடைச் சட்டத்தை அமூல் படுத்துவதற்கு தமிழரசுக் கட்சி முன்னின்றது. இதன் தொடர்ச்சியாக 1958ல் சிறுபான்மை தமிழர் மகாசபையினருடன் சேர்ந்து தேனீர் கடைகளில் தலித் மக்களை அனுமதிக்கக் கோரி போராட்டங்களை நடத்தியது. இந்த நிகழ்ச்சிப் போக்கு தலித் மக்கள் தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான சூழலை உருவாக்கியது. ஆனால் சாதியத்தின் வேர்களை அழிக்கவோ அல்லது சாதியத்திற்கெதிரான தொடர்ந்த போராட்டங்களை முன்னெடுக்கவோ தமிழரசுத் தலைமை முனையவில்லை. ஏனெனில் யாழ்ப்பாண வெள்ளாளரின் அபிலாசைகளுக்கு எதிரான அரசியல் கருத்தியல் தளம் அதற்கு இருக்கவில்லை. மாறாக ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியல் ஆட்பலத்தின் அடிப்படையிலேயே அதன் அரசியல் தளம் அமைந்திருந்தது. எனவே சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாமல் ஆதிக்க சாதியின் ஆதிக்கம் குறையாமல் தலித் மக்களுக்கான சில விட்டுக் கொடுப்புகளை செய்வதன் மூலம் தமிழ் அடையாள அரசியலை அது முன்னெடுத்தது.

தமிழரசுக்கட்சியின் கலாச்சார கருத்தியல் நிலைப்பாடானது நாவலர் இராமநாதன் தலைமைகளில் இருந்தெழுந்த தலித்துகளை முற்றாக புறம் தள்ளும் கருத்தியல் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டிருந்தது உண்மையே. இலங்கை அரசு சிங்களபெரும்பான்மை என்ற கருத்தியலுக்கூடாக கொவிகம ரடல சாதியினரின் மேலாண்மையை நிறுவியதற்கெதிரான அரசியலுக்கு தமிழ் அடையாளத்திற்கூடாக ஒரு ஒருங்கிணைப்பை தமிழரசு கட்சி ஏற்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் கண்டதெனலாம். ஆனால் சைவ சித்தாந்த கருத்தியலை உடைத்துக்கொண்டு அது வெளிவரவில்லை. இந்த ஒருங்கிணைப்பு தலித் மக்களை தமிழர் என்ற அடையாளத்துள் இணைத்து கொண்ட அதேசமயம் அவர்களது ஒடுக்கப்பட்ட சமூக நிலைக்கெதிரான கருத்தியல் போராட்ட நெறி முறைகளை கொண்டிருக்கவில்லை. சம பந்தி போசனம் போன்ற சில அடையாள –நடவடிக்கைகள் ஆங்காங்கே நடத்துவதுடன் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் மட்டுப்படுத்தபட்டன.

எனவே தலித் மக்கள் தமிழர் என்ற அடையாள அரசியலுக்குள் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும் நடைமுறையில் அவர்களுக்கான சமூக நீதி கிடைக்கவில்லை. தலித் மக்களை தமிழர் என்ற அடையாளத்துள் ஒன்றிணைக்கும் அதேவேளை அவர்களை உள்ளிருந்து புறம்தள்ளும் கருத்தியலே தமிழரசுக்கட்சிக்கான நிலைப்பாடாக இருந்தது . நாம் தமிழராக ஒன்றுபடுவோம் சாதியாக வேறுபடுவோம் என்பதை சொல்லாமல் சொல்லும் நிலைப்பாடே இது.

ஆனாலும் தலித் மக்களின் அரசியல் விழிப்புணர்வு இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புகளை காட்டிகொண்டு தான் இருந்தது.

1960களின் நடுப்பகுதிகளில் தலித் மக்கள் அருந்ததியர் சங்கம், திருவள்ளூவர் மகாசபை போன்ற அமைப்புகளூடாக தமது எதிர்ப்பு குரல்களை எழுப்பி வந்தனர். சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி அமைத்து தாம் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுவதற்கெதிராக குரல் எழுப்பினர். தமிழரசுத் தலைமை அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த போதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயங்கியது. ஏனெனில் அவர்களது அரசியல் இருப்பு பெரும்பான்மை வெள்ளாள அபிலாசைகளால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி சாதியம் சம்பந்தமாக மெத்தனப் போக்கையே கையாண்டது.

இந்த இடைவெளியானது கம்யூனிஸ்ட் கட்சியால் நிரப்பப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று ஒழுங்கு படுத்திய ஆலயப் பிரவேசப் போராட்டம் தலித் மக்களில் பெரும்பான்மையினரை ஈர்த்தது. தீண்டமை ஒழிப்பு வெகுஜன முன்னணி என்ற அமைப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சாதியத்திற்கெதிரான பல்வேறு போராட்டங்களை அக்காலகட்டத்தில் முன்னெடுத்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலித் மக்களின் பிரச்சனைகளை வர்க்கப் பிரச்சனையாக மட்டுமே பார்த்தது. வர்க்க ரீதியான விடுதலையின் பின் சாதிய அடக்குமுறை அழிந்துவிடுமென்ற பொருளாதார அடிப்படைவாத கண்ணோட்டத்தையே கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது. தமிழரசுக் கட்சியை விட தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பாத்திரம் வகித்திருப்பினும் சாதியத்தினது அடிப்படைகளை புரிந்து கொள்ள தவறி வர்க்கத் தராசின் மூலம் சாதியத்தை நிறுத்தது.

ஒருவகையில் தலித் மக்களுக்கு போராட்ட உணர்வையும் விழிப்புணர்வையும் தூண்ட கம்யூனிஸ்ட் கட்சி அக்காலகட்டத்தில் உந்து சக்தியாக இருந்தது உண்மையே. பல கம்யூனிஸ்ட் கட்சி போராளிகளும் தலைவர்களும் சாதியம் கேடான விடயம் என்பதை மனப்பூர்வமாக நம்பினார்கள் என்பதும் யதார்த்தம். ஆனாலும் தலித் மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை சாதியத்தின் தகவமைப்பை கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் எடுக்கவில்லை.

சாதியமானது மேற்கட்டுமானத்தின் ஒரு பிரதிபலிப்பு; அடிக்கட்டுமானம் தகர்ந்து விட்டால் சாதியம் தானாக அழிந்துவிடும் என்ற வரட்டுதனமான தத்துவார்த்த பார்வை பரவலாக வட இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் மத்தியில் இருந்தது; இருக்கிறது. அத்துடன் சீனாவினதோ ரஸ்யாவினதோ உத்தியோகபூர்வ கம்யூனிச கோட்பாடுகளை மீறி செயல்படுவதற்கான நிலையில் அக்கால சீன, ரஸ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கவில்லை.

எனவே தமிழரசுக் கட்சியினரோ கம்யூனிஸ்ட் கட்சியினரோ தலித் மக்களின் சமூக விடுதலையின் அடிப்படையை புரிந்து கொண்டு அதனை முதன்மைப் படுத்திய அரசியல் வேலைத் திட்டங்களை கொண்டிருக்கவில்லை எனலாம்.

தலித் மக்களின் ஆலயப் பிரவேசம், தேனீர்கடை பிரவேசம் போன்ற போராட்ட நிகழ்வுகளுக்கெதிராக ஆதிக்க சாதி வன்முறையைக் கிளம்பியது. அந்த வன்முறையை தலித் மக்கள் வன்முறை மூலமே எதிர் கொள்ள நேர்ந்த்து. கோவில் பிரச்சனைகளுக்குள் அரசியல் நுழையக்கூடாதென்ற உப்புச்சப்பற்ற விளக்கத்தை தமிழரசுக் கட்சி ஒரு புறம் கூறிக் கொண்டது. மறுபுறம் ஆதிக்க சாதியினர் செல்வநாயகத்தை எம்.பி.ப் பதவியை துறந்து ஆலயப் பிரவேசத்தை முன்வைத்து தேர்தலில் நிற்குமாறு கோரினர்.

இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழரசு கட்சி சாதியத்திற்கெதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக சாதிய பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் நடந்து கொண்டதென்கிறார் பிறயன் பபன்பேகர் என்ற அறிஞர். அவரது கருத்தின் படி அக்காலகட்டத்தில் யூ.என்.பியுடன் கூட்டு சேர்ந்திருந்த தமிழரசுக் கட்சி திருகோணமலை கோவிலை இந்துக்களின் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த யூ.என்.பி உறுதியளித்தது போல் செய்ய தவறிய காரணத்தால், கூட்டிலிருந்து விலகி தமிழருக்கு அநீதி என்ற பதாகையின் கீழ் மீண்டும் தமிழர்கள் என்ற அடையாள அரசியலுக்குள் அனைவரும் இணைந்தனர். இன ரீதியான எதிர்ப்பு நிலைப்பாடு அரசியல் லாபத்தை ஈட்டிதரும் என்பதை மீண்டும் படித்துக் கொண்டது தமிழரசு கட்சி என்கிறார் அவர். அத்துடன் இந்த லாபத்தை தக்கவைக்கும் முகமாக வெள்ளாளரின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படாமல் ஒருசில தலித்துகளை தேர்தலில் நிறுத்தும் கொள்கையையும் பிற்காலங்களில் தமிழரசுக் கட்சியும் பின்னர் கூட்டணியும் வரித்து கொண்டதென்கிறார்.

எனவே ஆதிக்க சாதியின் நலன்களுக்கு பாதகமின்றி தீண்டாமை ஒழிப்பு, தேர்தலில் சிறு பங்கு போன்ற சில விட்டுக் கொடுப்புகள், சமரசங்கள் ஆதிக்க சாதியின் நலன்களை முன்னிறுத்தியே நிகழ்ந்தன. இன்னொருவகையில் தலித் மக்களுக்கு எதிரான சாதிய கருத்து நிலைகளை சாதகமாக்கி தென்னிலங்கை கட்சிகள், பவுத்த குருமார்கள் மற்றும் இடதுசாரிகள் தலையிடும் நிலை வரவிடக் கூடாதென்ற அச்சமும் தமிழ் தலைமைகளுக்கு இருந்தன. எனினும் ஆதிக்க சாதியினரின் நலனை மறுதலித்து தலித் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான செயல் திட்டங்களை தனது அரசியல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ள தமிழ்த் தலைமை முன்வரவில்லை.

தமிழ் மிதவாத அரசியல் 1983ல் தமிழர்களுக்கு மேல் அரசும் சிங்கள இனவாதிகளும் தொடுத்த வன்முறையால் அஸ்தமனத்துக்கு வந்தது. இளைஞர்களின் ஆயுத போராட்டம் மக்களின் ஆதரவு பெற்றது.

சாதி, பிரதேசம், மதம் இவற்றை கடந்து தமிழ் தேசிய உணர்வை கொண்டுவர அப்போதுதான் முளைவிட்டிருந்த இயக்கங்கள் மனப்பூர்வமாக விரும்பியிருப்பினும் காலப்போக்கில் ஆதிக்க சாதிய அரசியலுக்கப்பால் செயற்படாத நிலையே தொடர்ந்தது.

இலங்கையரசின் இன அடக்குமுறையின் உச்சக்கட்ட காலமான ’83’ முடிந்து, இயக்கங்கள் பலம் பொருந்தி வரும் காலகட்டத்தில், 84ஆம் ஆண்டு காலப் பகுதியில் புத்தூர் பகுதியில் தலித் மக்களுக்கு மேலான அடக்குமுறை ஆதிக்க சாதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆயுதம் தாங்கிய பெரும் இயக்கங்களும் தமிழரசுக் கட்சி வழியில் சாதிய ஆதிக்கம் பற்றிய கோட்பாடுரீதியான நிலைப்பாட்டை எடுக்காமல், இலங்கை அரசுக்கெதிரான போராட்டமே இன்று முக்கியம் சாதிய முரண்பாடுகளை பின்னர் தீர்த்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது, ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாத நிலையே ஆகும்.

.பி.ஆர்.எல்.எப்., என்.எல்.எப்.டி. போன்ற அமைப்புகள் சமூக விடுதலையை முன்வைத்து சாதிய ஆதிக்கத்தை எதிர்த்த போதும் யாழ்ப்பாண ஆதிக்க சமூகம் அவர்களை பள்ளர், பறையர் அமைப்புகளென ’பட்டம் சொல்லி’ தமிழ் அரசியல் பரப்பிலிருந்து ஓரங்கட்டியது. .பி.ஆர்.எல்.எப்.இன் இந்திய சார்பு அரசியலும் 1987க்கு பின்னர் இந்திய இராணுவத்தினுடன் அவர்கள் சேர்ந்தியங்கிய முறையும் இந்திய இராணுட அத்துமீறல்களை கண்டிக்கத் தவறியதும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் முழு அரசியல் செல்வாக்கையும் வீழ்த்தியிருப்பினும் 86களில் விடுதலைப் புலிகளின் மாற்று இயக்க அழித்தொழிப்பு நடவடிக்கையுடன் சகல மாற்று கருத்துக்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

விடுதலை புலிகள் சாதிப் பாகுபாட்டுக்கெதெரான தடை விதித்திருந்த போதும் சாதியத்திற்கெதிரான கோட்பாடு ரீதியான பார்வையை கொண்டிருக்கவில்லை. மாறாக விடுதலை புலிகள் என்ற இராட்சத இராணுவ இயந்திரத்தில் தலித்துக்கள், ஆதிக்க சாதிகள், பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் சமமான பாத்திரம் கொடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளில் இருந்த பெரும்பாலோர் சாதி, சமய பாகுபாட்டை முன்னிறுத்தவில்லை என்பது ஏற்றுகொள்ள பட வேண்டியிருப்பினும் விடுதலை புலிகளின் அரசியல் வறுமை ஆதிக்க சாதி நலன்களை பேணுவதற்கான ஒரு தளமாக அமைந்தது.

ஒருவகையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ளோ அல்லது மற்றைய ஆயுத அமைப்புகளுக்குள்ளோ வெளிப்படையாக சாதிய பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. யார் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்ற விவரங்களிலும் அவர்கள் அக்கறைபடவில்லை. அமைப்புகளில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்த நிலை, மற்றும் அவர்கள் சமூகத்தை விட்டு பிரிந்த நிலை போன்ற விடயங்கள் ஒரு மேலோட்டமான சாதிய வேற்றுமையற்ற சமத்துவத்தை கொடுத்திருக்கலாம். குறிப்பாக விடுதலைப் புலிகள் ஒரு பலம் பொருந்திய இராணுவ அமைப்பாக பரிணமித்த பின் தமிழ் சமூக நடைமுறைகளுக்கும் புலிகள் அமைப்புக்கும் ஓர் இயல்பான பரஸ்பர இணைப்பு இருக்கவில்லை. எனவே சாதிய நடைமுறைகள் சமூகத்தில் தொடர்ந்தன.

விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் சாதி மறுப்புத் திருமணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை கலப்பு மணங்கள் என்று தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு மூடப்பட்ட அமைப்புக்குள் நிகழ்ந்தன. இன்னொருவகையில் விடுதலை புலிகளில் இருந்தவர்கள் இன்னொரு ’சாதி’யாகவே பார்க்கப்பட்டனர். கலப்பு மணங்கள் புரிந்து, விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பின் சமூக வாழ்வை தொடர முயலும் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்கள் சாதிய சமூகத்தில் ஓரங்கட்டப்படும் நிலையும் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் சமூகத்திற்கும் இருந்த பாரிய இடைவெளி சாதியத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது.

யுத்தம், இடம் பெயர்தல் போன்ற நிகழ்வுகளால் தீண்டாமை ஒரளவுக்கு ஒழிந்திருப்பினும் சாதிய சிந்தனை முறையோ ஆதிக்கமோ ஒழியவில்லை. ஒருவகையில் விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய பாகுபாடு வெளிப் பார்வைக்கு குடாநாட்டில் உறை நிலையில் இருந்த தோற்றத்தை கொடுத்த போதும் சாதிய நடைமுறைகள், அவை திருமணமாகட்டும் சடங்காகட்டும் தொடர்ந்தன.

அதேவேளை ஆதிக்க சாதியினரில் பெரும் பிரிவினர் யுத்த காலத்தில் புலம் பெயர்ந்து அய்ரோப்பிய, அமரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கு ஒரு சாதிய குட்டி யாழ்ப்பாணத்தை உருவாக்கி விடுதலை புலிகளின் நிதி மையத்தினை இயக்குபவர்களாக இருந்தனர். வெளி நாடுகளில் கோவில்களிலிருந்து பழைய மாணவர் சங்கம் வரை புலிகளின் நிதி சேர்ப்பு மையங்களாக தொழிற்பட்டன. அடுத்து, ஆதிக்க சாதிகளே அமெரிக்கா ஐரோப்பாவில் படித்தவர்களாகவும் பணக்காரராகவும் பெரும்பாலும் இருந்தனர். சர்வதேச பிரச்சாரம், சர்வதேச நிதி, சர்வதேச ஆயுதக் கொள்வனவு இந்த மூன்று தளங்களும் விடுதலை புலிகளின் உயிர் நாடியாக செயல்பட்டன. இயல்பாக ஆதிக்க சாதிகளே புலிகளின் பிரதி நிதிகளாகவும் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் வெளி நாட்டு பிரதி நிதிகள் பழமைவாத சிந்தனையும் சாதிய சிந்தனையும் கொண்டவர்களாகவே இருந்தனர். தமிழர் என்ற அடையாளத்தை வெளியில் சொல்லி கொண்ட போதும் சமூக தளங்களில் சாதிய அடையாளங்களை இறுக்கமாக பின்பற்றுபவர்களாகவே இருந்தனர். விடுதலை புலிகளுக்கு இது பிரச்சனையாக இருக்கவில்லை.

எனவே விடுதலைப் புலிகளின் சாதிய வேறுபாட்டு எதிர்ப்புச் சட்டம் நடைமுறையில் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. மாறாக இலங்கையில் ஆதிக்க சாதிகள் தமது ஆதிக்க நிலையை தக்கவைத்துகொண்டு சூழலுக்கேற்ப சில சமரசங்களை செய்து கொண்டனர். புலம்பெயர் ஆதிக்க சாதிய மேலாதிக்கத்துடன் விடுதலைப் புலிகள் ஒருவகை சமரசம் செய்து கொண்டனர். எனவே விடுதலை புலிகள் சாதிக்கெதிரான சட்டங்களை இயற்றியிருந்தும் தமிழர் என்ற அடையாளத்துக்குள் சாதி மறைப்பு செய்தனர். ஆனால் அவர்களது அரசியல் சாதியத்தை பொறுத்தவரை தமிழரசு கட்சியின் நவீன வடிவமே.

எனவே ஆதிக்க சாதிச் சிந்தனையும் நடைமுறையும் மாறும் சூழல்களுக்கு தகவமைத்து கொண்டு தனது ஆதிக்கத்தை விட்டுக் கொடாமல் சில சமரசங்களுக்கூடாக தன்னை நிலை நிறுத்துகிறது. தனது ஆதிக்கத்திற்கு நெருக்கடி நிலை வரும் போது அது வன்முறையை நாடுவதும் எதிர்பார்க்கக்கூடியதே.

விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் சாதியம் புதிய நிலைகளுக்கேற்ப மீண்டும் தன்னை தகவமைக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் மேலும் பலப்படுகிறது. குறிப்பாக:

தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தில் ஒன்றுபடுதல் என்ற கருத்தியல் இன்று பலமிழந்ததாக இருக்கும் நிலை.

யுத்தத்தின் பின்னால் ஏற்பட்ட நிலையான அரசுக்கான சூழல் வெளி நாட்டு முதலீடுகள் வியாபாரங்களை தங்கு தடையற்று அனுமதிக்கும் நிலையும் உலகமயமாக்கலும்.

ஆதிக்க சாதியினர் (குறிப்பாக புலம் பெயர்ந்தோர்) தமது சொத்துக்களையும் நிலங்களையும் உரிமை கோரல்.

இடம் பெயர்ந்தவர்கள் தமது கிராமங்களுக்கு திரும்புதலும் சமூக மீள் கட்டுமானமும்.

காலங்காலமாக ஆதிக்க சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இழிசனர் என பட்டம் சூட்டப்பட்ட தலித் மக்களில் பெரும்பாலோர் இன்றைய இலங்கை சூழலில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே உள்ளனர். தலித் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் படிப்பாலும் தொழிலாலும் முன்னேறி இருப்பினும் அலுவலகங்களிலும் பொது ஸ்தாபனங்களிலும் அவர்கள் புறக்கணிக்கபடும் நிலை நிலவுகிறது. தமது கிராமங்களுக்கு திரும்பும் ஆதிக்க சாதியினர் வெளி நாட்டவர் அனுப்பும் பணத்தின் மூலம் கோவில்களை புதுப்பிப்பதும் பாடசாலைகளை புதுப்பிப்பதுமான வேலைகளை செய்து தமது சாதிய, சமய கலாச்சாரத்தை புனருத்தாரணம் செய்கின்றனர். இந்த நடவடிக்கைகள் மூலம் யுத்த காலத்தில் இடம் பெயர்ந்த சூழலால் மறைக்கப்பட்டிருந்த சாதியம் மீண்டும் புத்துயிர்ப்பு அடைகிறது. அரசின் நவதாராள பொருளாதார கொள்கைகள் ஏற்கெனவே அடிமட்டத்தில் இருந்த தலித் மக்களை மேலும் நசுக்கும் நிலையில் ஏற்கெனவே பொருளாதார. அரசியல், கலாச்சார மேலாதிக்கம் பெற்றிருக்கும் ஆதிக்க சாதியினரின் அதிகாரத்தை வலுவடைய செய்கிறது.

இதில் முக்கியமான விடயம், தலித் மக்களின் உரிமை சம்பந்தமான குரல் எழும் போது தற்போது சாதி இல்லை என்ற மறைப்பு அரசியல். ஒருவகையில் சாதியம் இல்லை என்பதன் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் மிகவும் நுணுக்கமானது. தலித் மக்கள் தாங்கள் சாதிய ரீதியாக புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எதிர்ப்பு குரலை செயலிழக்கச் செய்யும் சாதுர்யமான ஆதிக்க சாதி அரசியல் இது. இந்த கருத்தியல் பின்புலத்தில் தான் சாதியம் தனது ஆதிக்கத்தை தற்சமயம் நிலை நாட்டுகிறது. ஆதிக்க சாதியின் நவீன நாவலர்கள் சாதிய ஆதிக்கத்தை பாதுகாப்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். சாதி ஒழிந்து விட்டதென்று கூறிக்கொண்டு சாதியை பாதுகாக்கும் அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

முடிவாக, யாழ்ப்பாண ஆதிக்க சாதியானது வரலாற்றுப் போக்கில் வெள்ளாளர் என்ற பரந்த அடையாளத்துக்குள் பல உபசாதிகள் அடங்கிய ஒரு சாதிய ஆதிக்க கூட்டு. இந்த ஆதிக்கமானது மாறி வரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தேவையான நேரங்களில் தனது ஆதிக்கத்துக்கு குந்தகம் வராத முறையில் சமரசம் செய்வதும், சாதிய எதிர்ப்பு தனது ஆதிக்கத்திற்கான சவாலாக வரும் போது வன்முறை மூலம் எதிர்கொள்வதுமாக தனது சாதிய இருப்பை தொடர்ந்து பேணி வருகிறது. நாவலரால் தலித்துகள் முழுமையாக புறம் தள்ளப்பட்ட சைவ ஆகம கருத்தியல் காலனித்துவகால பகுதியில் மேலாண்மை செலுத்தியது. தமிழரசு கட்சி அதனை தொடர்ந்த ஆயுத அமைப்புகள் சாதிய அமைப்பை அதன் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளாமல் தமிழர் என்ற மேலோட்டமான அடையாள ஒருங்கிணைப்பூடான கருத்தியல் மேலாண்மையை உருவாக்கின. ஆனால் சைவஆகமகருத்தியலை மறுதலித்து தமிழ் அடையாள கருத்தியல் தோன்றவில்லை. மாறாக சைவ மறுமலர்ச்சியின் சாதியக் கருவில் உருவான குழந்தையே தமிழ் அடையாளம். எனவே சாதிய மேலாதிக்க கலாச்சார வேரை அது அசைக்கவில்லை. எனவே விடுதலை புலிகளின் தோல்வியின் பின் ஆதிக்க சாதிய கலாச்சார கருத்தியல் ‘சாதி இல்லை’ என்று கூறிக்கொண்டு வெளிப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல. அதனை எதிர்கொள்ள சமூக இயக்கம் அவசியம்.

உசாத்துணை நூல்கள்

  1. Caste and Social Exclusion of IDPs in Jaffna Society . (Parmsothy Thanges)

  2. The Laws and Customs of the Tamils of Sri Lanka ( H.W. Thambiah)

  3. Prison Note Books , Gramsci

  4. Nation and National Identity in South Asia

  5. The Sri Lankan Tamils – Ethnicity and Identity

  6. The persistence of caste , Anand Teltumbde

  7. The Sri Lanka Reader – History ,Culture and Politics

  8. தலித் அறிக்கை – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

  9. சைவ வினாவிடை – ஆறுமுக நாவலர்

  10. யாழ்ப்பாணச் சமய நிலை – ஆறுமுக நாவலர்

(குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலரில் வெளியானது / யாழ்ப்பாணம் யூலை 2013

 

0.00 avg. rating (0% score) - 0 votes

We place these articles at no charge on our website to serve all the people who cannot get access to it where they live and for transmit information.We dont gain any monetary benefits by publishing articles.Thank you very much.

Article Posted by

Please comment with your real name using good manners.

Leave a Reply

*

code

Social Media Auto Publish Powered By : XYZScripts.com