The Social Science Collective

நான் என்றும் மக்கள் ஊழியனே…

Article

ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக, ‘ஏழை’களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவதில் ஜெட் வேகத்தில் அரசு இயந்திரம் செயல்பட்டதைக் கண்ணுற்ற பின்னணியில், காலம் காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு கிடந்த பட்டியலின, பழங்குடியின், சமூக-கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உழைத்தவர்களின் போராட்டங்கள் எத்தகைய எதிர்ப்புகளை சந்தித்து வந்தன என்பதை அறிந்த பின்னணியில் பார்க்கும்போது, அரசு இயந்திரத்தின் மிகமுக்கியமான கண்ணியான இந்திய ஆட்சிப் பணியில் இருந்து கொண்டே சமூக நீதியை நிலைநாட்டப் பாடுபட முடியும் என்பதை இன்று வரை நிரூபித்து வருபவர் திரு. பி.எஸ். கிருஷ்ணன்.

இந்த ஆண்டிற்கான வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ள பின்னணியில், சாதிக்கு எதிரான அவரது நீடித்த போராட்டங்கள் குறித்து வெளியாகியுள்ள நூலை அறிமுகம் செய்வது அவசியம் எனக் கருதுகிறேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வசந்தி தேவி, திரு. பி.எஸ். கிருஷ்ணனிடம் கேட்ட 50 கேள்விகளுக்கான பதில்களின் ஊடாகவே அவர் தன் வாழ்க்கை சரிதத்தை விளக்கியிருந்தார். வாழ்க்கைச் சரித நூல்களில் மிகவும் வித்தியாசமான பி. எஸ். கிருஷ்ணன்: வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்குச் சார்பாக ஆட்சி நிர்வாகத்தைத் திருப்புவது என்ற அந்த நூல் இப்படித்தான் தொடங்குகிறது:

“வரம்பை மீறிய வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்குச் சார்பாக நடந்து கொள்வது; கலப்புத் திருமணங்களை தீவிரமாக ஊக்குவிப்பது; வடமொழியில் தனக்குள்ள அறிவைப் பயன்படுத்தி மதத்தின் வீரியத்தைக் குறைப்பது; கிராம அதிகாரிகளின் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக கிராமத்து மக்களின் வார்த்தைகளையே நம்புவது; சீர்குலைவு சக்திகளுக்கு உதவும் வகையில் நடந்து கொள்வது”

மேலே சொன்னது அரசு அதிகார முறைப்படி ஆண்டுதோறும் தன் கீழுள்ள அதிகாரிகள் பற்றி உயரதிகாரிகள் மேற்கொள்ளும் வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் திரு. கிருஷ்ணனின் உயர் அதிகாரி அவரைப் பற்றி பதிவு செய்திருந்தவை.

அரசு இயந்திரம் என்பது விருப்புவெறுப்பற்ற ஒன்று என்பதாக கருதப்பட்டாலும், அது அரசியல் அமைப்புச் சட்ட ரீதியாகச் செயல்படக் கடமைப்பட்டது என்று கூறப்பட்டாலும், நடைமுறையில், தொலைதூரக் கிரமங்களில் உள்ள ஆதிக்க சக்திகள், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை அனைத்து வகையிலும் முறியடித்து, தங்களின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டியே வந்தனர்; வருகின்றனர் என்ற நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது.

இந்தப் பின்னணியில், சமூக அவலங்கள் பற்றிய தெளிவுடைய ஓர் இளைஞராக, 1956-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த திரு. கிருஷ்ணன்,  நில அளவை அதிகாரியாக தன் அரசுப் பணியைத் தொடங்கியபோது, கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்களை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அங்குள்ள நிலமற்ற ஏழைகளுக்கு, குறிப்பாக பட்டியலின மக்களுக்கு, வழங்குவதற்கு முன்னுரிமை அளித்ததில் இருந்து தொடங்கி, அவர்களுக்கு குடிமனைப் பட்டாக்களை வழங்குவது, கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்வது என அரசு விதிகளை முறையாக அன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் அமல்படுத்திய முதல் அதிகாரியாகத் திகழ்ந்தார்.

அவரது இந்த முயற்சிகளில் அதிகார வர்க்கத்திடமிருந்தும், ஆதிக்க சக்திகளிடமிருந்தும் எத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொண்டிருப்பார் என்பதற்கான ஓர் உதாரணமே மேலே சுட்டிக் காட்டிய உயர் அதிகாரியின் மதிப்பீட்டு அறிக்கை. எனினும் எதற்கும் அஞ்சாது, தொடர்ச்சியான பணியிட மாறுதல்களை எதிர்கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டரீதியான தன் தெளிவான செயல்பாட்டின் மூலம் மத்திய அரசின் செயலாளர் என்ற தகுதி (இந்தத் தகுதியும்கூட அவருக்குக் காலம் தாழ்ந்தே கிடைத்தது) வரையில் உயர்ந்த திரு. கிருஷ்ணன் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை.

பட்டியலின, பழங்குடி மக்களுக்கான தேசிய கமிஷனுக்கு அரசியல் அமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கிய 1990-ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்; புத்த மதத்திற்கு மதம் மாறிய தலித் மக்களுக்கு பட்டியலின அந்தஸ்தை வழங்குவது; பட்டியலின, பழங்குடி மக்களின் மீதான கொடுமைகளைத் தடுப்பதற்கான 1989-ம் ஆண்டு சட்டம் (இது 2015-ம் ஆண்டில் திருத்தம் பெற்றது); 1993-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கைகளால் மலம் அள்ளுவோருக்கு வேலையளிப்பதை தடை செய்வது மற்றும் உலர் கழிவறை அமைப்பதை தடைசெய்வது ஆகியவற்றுக்கான சட்டம் (இது 2013-ம் ஆண்டில் கைகளால் மலம் அள்ளுவோருக்கு வேலை தருவதைத் தடுப்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டம் என்பதாக மாற்றம் பெற்றது); சமூக – கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை தேசிய அளவிலானதாக மாற்றியது என நடைமுறைப்படுத்தத் தக்க சட்டங்களை அரசியல் அமைப்புச் சட்ட ரீதியாக உருவாக்குவதில் அவரது பங்கையும் எதிர்கொண்ட சவால்களையும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது.

அதைப் போன்றே, ஆந்திரப் பிரதேச அரசின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக – கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உருவாக்குவதிலும், அதை எதிர்த்த சட்டப் போராட்டங்களில் ஆலோசகராக இருந்து உச்சநீதிமன்றத்தில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதிலும் திரு. கிருஷ்ணனின் ஆழமான அனுபவங்கள் உதவியுள்ளன. சமூகத்தினால் முற்றாகக் கைவிடப்பட்டுள்ள கைவினைஞர்கள், நாடோடி இனத்தவரின் மேம்பாட்டிற்கான அவரது முயற்சிகளும் தனித்தன்மை வாய்ந்தவை.

மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்களில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு உள் திட்டம், பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்வதிலும் அவரது பங்கு மகத்தானது என்பதையும் இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.

ஒரு மாநில அரசில் இடைநிலை அதிகாரியாக 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவன், அரசுக் கருவூலத்திலிருந்து பணம் எடுத்து, செலவு செய்வதற்கான அதிகாரத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தியவன் என்ற பின்னணியில், இந்த நூலைப் படித்து முடித்தபோது, சமூக நீதிக்கான திரு. கிருஷ்ணனின் போராட்டங்களில் தென்பட்ட  ‘கருமமே கண்ணான’ போக்கு என்னை பெரிதும் வியக்க வைத்தது. இதுவல்லவோ வாழ்வு என நினைக்கத்தக்க வகையில் சாதியை மறுத்து, சமூக நீதியை உயர்த்திப் பிடித்து அவர் இதுவரை நடத்திய உண்மையான வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய ஒன்றாக இருப்பதை என்னால் உணர முடிந்தது.

அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு, அதன் மாய வலைகளில் விழாமல், தனக்கு வழங்கப்படும் எந்தப் பதவியிலும் சமூக நீதியை நிலைநாட்டும் வாய்ப்புகளையே தேடிக் கண்டுபிடித்துச் செயல்படுத்திய அவரது பாங்கு ஒவ்வொரு அரசு ஊழியருக்குமான பாடமாகும். அரசு அல்ல; அது பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் ஊழியராகவே அவர்கள் செயல்பட வேண்டும் என்பதை வலுவாக எடுத்துக் கூறுகிறது இந்நூல். அனைத்து அரசு ஊழியர்களின் பயிற்சிக்காலத்தில் பாடமாக வைக்கும் தகுதி பெற்றது என்ற கருத்தும் எனக்குள் எழுகிறது.

பட்டியலின, பழங்குடியின, சமூக-கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட, குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சமூக அமைப்பில் காலம் காலமாக உயர்ந்த நிலையில் இருக்கும் பிரிவினருக்கு சமதையான நிலையை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முழுமையான, சட்ட ரீதியான, திட்ட ரீதியான, சிறப்புத் திட்டங்கள் குறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை இந்நூலில் தரப்பட்டுள்ள அவரது செயல்திட்டம் விரிவாக எடுத்துக் கூறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இது வழங்கப்பட்ட போதிலும், இன்றளவும் இந்தச் செயல்திட்டத்தைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பெயரளவிற்குக் கூட இணைத்துக் கொள்ள அவை முன்வரவில்லை என்பதே திரு. கிருஷ்ணனோடு இணைந்து நடைபோட வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

சமூக நீதிக்காக நிற்கும் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஆவணம் இது என்பதற்கு மேலாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

எ க்ருசேட் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் – பி.எஸ். கிருஷ்ணன்: பென்டிங் கவர்னன்ஸ் டுவார்ட்ஸ் த டிப்ரைவ்ட் – கான்வர்சேஷன்ஸ் வித் பி.எஸ். கிருஷ்ணன் – டாக்டர். வசந்தி தேவி – வெளியீடு: சவுத் விஷன் புக்ஸ், 132/251/ அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086. விலை. ரூ. 650/- (அட்டைப் பதிப்பு)

வீ. பா. கணேசன்

0.00 avg. rating (0% score) - 0 votes

We place these articles at no charge on our website to serve all the people who cannot get access to it where they live and for transmit information.We dont gain any monetary benefits by publishing articles.Thank you very much.

Article Posted by

Please comment with your real name using good manners.

Leave a Reply

*

code

Social Media Auto Publish Powered By : XYZScripts.com