The Social Science Collective

தலித் அரசியல் வாசிப்பில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்

Article

KR1KR21957 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் குறித்து உடனடியாக 1958 லேயே ஒரு கள ஆய்வு நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தப் புத்தகம் கடந்த 49 ஆண்டுகளாக ஒரு மறு பதிப்புகூட  பெறவில்லை.  அ. ஜெகநாதன் முயற்சியால் யாழ்மை பதிப்பகத்துக்காக மறுபதிப்பு செய்யப்பட்டுத் தற்போது வெளிவந்துள்ளது. அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்’ வரலாற்றுப் பதிவும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த கூடுதல் வாசிப்புக்கு உதவுகிறது. தலித் விடுதலைக்கான போராட்டங்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்படும் காலகட்டத்தில் இவ்விரு  புத்தகங்களும் முக்கியத்துவம் பெருகின்றன.


முதுகுளத்தூர் கலவரம் பள்ளர்களுக்கு எதிராக மறவர்கள் நடத்திய கலவரம். 1957 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேவர் கை நீட்டிய வேட்பாளருக்கு வாக்களிக்காத பள்ளர்கள், நாடார்களுக்கு எதிராக வன்முறை ஏவப்படுகிறது. குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்லவேளையாக இம்முறை பாதிக்கப்பட்ட பள்ளர்களுக்காக வாதாட சமூக உரிமைப்  போராளி இம்மானுவேல் இருந்தார். இதனால் பள்ளர்கள் பலமாக இருந்த பகுதிகளில்  மோதல்கள் பலமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். இம்மானுவேல் இருந்தார். இன்னும் காங்கிரஸ் எம். எல். ஏக்களும், அதிகாரிகளும் இருந்தனர். பிரச்சனைக்குரிய இரு சமூகத்தவரும் சமாதானமாகப் போகவேண்டும் என்றுதான் ஆட்ட்சியர் கூறினார். யார் மீது தவறு என்பதைக்கூட சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மனநிலை, குறிப்பாக மறவர் சமூகத்தவரின் மனநிலை எப்படி இருந்தது என்றால் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல், முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமாக நாற்காலியில் அமர்ந்து பேசியதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்ல தேவருக்கும், இம்மானுவலுக்குக்கும் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.

” கூட்டறிக்கை விடுவதென்று யோசனை கூறப்பட்டது. தேவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஹரிசன சார்பில் இம்மானுவேலும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அறிக்கையில் கையொப்பமிடுவதை ஆட்சேபித்தார். காங்கிரஸ்காரர்களோடு கூட்டாக, தான் எதுவும் செய்தால் அவர்கள் தம் கழுத்தை அறுத்துவிடுவார்கள் என்றார். அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கும் இம்மானுவேலுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. ஒரே வாசகமுள்ள தனித்தனி அறிக்கைகளில் தனித்தனியாய் கையெழுத்திடலாம் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார். அதற்கும் தேவர் ஆட்சேபித்தார். ஆனால், ‘கையெழுத்திகிறீரா, இல்லையா?’ என்று கலெக்டர் கடுமையாகக் கேட்டதன்பேரில் தேவர் கயெழுத்திட்டார். கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளே, மறுநாள் 11ம் தேதி (செப்டம்பர், 1957) இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடியில் பஸ் ஸ்டான்டுக்குப் பக்கத்தில் இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார்.” (முதுகுளத்தூர் கலவரம், பக்: 57)

சமாதானக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முத்துராமலிங்கத் தேவர்,  “இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடுத்த நாள்தான் இம்மானுவேல் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

இம்மானுவேல் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமே முதுகுளத்தூர் கலவரமாக விசுவரூமமெடுத்துள்ளது. இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட நாளிற்கு மறுநாள் பரமக்குடி அருகில் உள்ள அருங்குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. மறவர்களும், பள்ளர்களும் வாழும் இவ்வூரில் அன்று கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று மறவர்கள் கோரினர். இதற்கு பள்ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. ஒரு பெண் உள்பட ஐந்து பள்ளர்கள் உயிரிழந்தனர். பள்ளர்களும் எதிர்த்துத் தாக்கினர். இதில் 5 மறவர்கள் இறந்தனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 58)  தொடர்ந்து “இம்மானுவேலைக் கொலை செய்தவர்கள் கீழத்தூவலில் மறைந்திருப்பதாக போலிசுக்கு 14 ஆம் தேதி காலையில் தகவல் கிடைத்தது. .இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஆயுதப்படைக்கும் மறவர்களுக்கும் நடந்த மோதலில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர். (கீழ்த் தூவல் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் நடந்துகொண்ட முறை மனித நாகரிகமற்ற செயல். அங்கிருந்த மறவர்களின் கண்களையும், கைளையும் கட்டி ஓடவிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.) தொடர்ந்து கலவரம் கிராமம் கிராமமாகப் பரவியது. 18 ஆம் தேதியன்று வீரம்பல் கிராமத்தில் இருந்த பள்ளர் இன மக்கள் ஒரு கிறிஸ்தவக் கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். மறவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நடத்திய துப்பாக்கிச் சூடில் பலர் உயிழந்துள்ளனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 60). நிராயுதபாணிகளான தலித்துகள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை மிகவும் அவலமானது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலித்துகளுக்கு இத்தகைய வன்கொடுமைகள்தான் இந்திய வரலாற்றில் பதில்களாக அமைகிற்து என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்திக்கூறியது.

இவ்வாறு பரமக்குடி, முதுகுளத்தூர், சிவகங்கை தாலுகாக்களில் பரவிய கலவரத்தில் “இரு சாதியரும் நேரடியாக மோதிக்கொண்டதில் 17 ஹரிஜன்களும், 8 தேவர்களும் கொல்லப்பட்டனர். காவலர்கள் துப்பாக்கு சூட்டிற்கு தேவர் சாதியைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மொத்தம் 2,842 வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவற்றில் 2,735 வீடுகள் ஹரிஜன்கள் வீடுகள்” (முதுகுளத்தூர் கலவரம், பக்: 117-118).

முத்துராமலிங்கத்தேவர் மற்றும் கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது என்பதை தினகரன் தெளிவாக விளக்குகிறார். கலவரம் தொடங்குவதற்கும் தேவர் பேச்சே தூண்டுதலாக இருந்துள்ளது என்பதை பிற்சேர்க்கைகள் மூலம் விளக்குகிறார், தொகுப்பாளர் இளம்பரிதி. பக்தவச்சலம் சட்டமன்றத்த்தில் தாக்கல் செயத அறிக்கையில், அமைதிக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை இவ்வாறு விளக்குகிறார்:

“இக்கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்பின் சார்பாகப் பேசவந்த திரு. இம்மானுவேல் அவர்களின் பங்கேற்பு குறித்தும், அவரது தலைமைப் பண்பு குறித்தும் திரு. முத்துராமலிங்கத் தேவர் கேள்வி எழுப்பினார். இக்கூட்டத்தில் தேவர் அவர்கள் இம்மானுவேல் அவர்களைப் பார்த்து, தனக்குச் சமமான தலைவனா? என்றும், எத்தனை ஹரிஜனங்கள் இம்மானுவேலைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்றும் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் கூறிய திரு. இம்மானுவேல், “தான் தேவருக்குச் சமமான தலைவனா? இல்லையா? என்பது தன்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஹரிஜன மக்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார். அரசின் அதிகாரப்பூர்வமான ஆவணத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த திரு. முத்துராமலிங்கத் தேவர் தனது தொண்டர்களிடம், “இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளார். இதற்கு அடுத்த நாளே இம்மானுவேல் சேகரன் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்…” .(முதுகுளத்தூர் கலவரம், பக்: 113).

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்பட்டு வந்தாலும், காலம் காலமாக தலித்துகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்கொடுமையின் தொடர்ச்சி என்பதுதான் உண்மை. தோள் சீலை போராட்டம், கழுகுமலைக் கலவரம், கமுதி வழக்கு, சிவகாசிக் கலவரம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே முதுகுளத்தூர் கலவரத்தைக் காணமுடிகிறது. சாதீய ஒடுக்கல்களை எதிர்த்தவர்களை  ஒடுக்குவது, ஒடுக்கப்பட்டவர்கள் சமூக- பொருளாதார  மேம்பாடடைவதைத் தடைசெய்வது  என்ற பொதுப்பண்பு இச்சம்பவங்கள் அனைத்திலும் வெளிப்படுவதே இதைக் கூறப்போதுமானது. 

தலித்துகளை பஞ்சமர் என்றும், இழி பிறவிகள் என்றும் மனு தர்மவாதிகள் கூறினர். இராமாயணத்தில் வேத மந்திரங்களை ஓதக் கேட்ட சம்புகன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினர். போர்க்களத்தில் பின்பற்றப்படும் வில் வித்தைகளைக் கற்ற தொல்குடி ஏகலைவன் கட்டை விரல் மகாபாரத்தில் வெட்டப்பட்டது. இந்துத்வா வரித்துக் கொண்ட சாதீய சுரண்டல் முறையே வன் கொடுமைகளுக்குக் காரணம். இப்புத்தகத்தில் (முதுகுளத்தூர் கலவரம்) முத்துராமலிங்கத் தேவரிடம் அரசியல் ரீதியான இந்துத்துவா பண்புக் கூறுகள்  இருந்ததை ஆசிரியர் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்: “…மதம் பெரிதா? மனிதன் பெரியவனா? என்றால் இந்து மதம் என் உயிர், முருகன் என் தெய்வம் என்கிறார். ஆனால் அந்தத் தெய்வத்திற்கும் இவர் தெய்வத்திற்கும் சம்பந்தமே இல்லை. சநாதந இந்துவான காந்திஜியை இந்து மத துரோகி என்கிறார். எந்த ஹிந்து காந்தியைக் கொன்றானோ, அந்த ஹிந்து சபைத் தலைவரான கோல்வால்கருக்கு பணமுடிப்பு கொடுக்கப்பட்டபோது, ‘காந்தி இந்துமதத் துரோகி, அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்’ என்கிறார்” என்று தினகரன் குறிப்பிடுகிறார். (பக்கம் 51)

முதுகுளத்தூர் கலவரம் பற்றி அறிய ‘முதுகுளத்தூர் கலவரம்’ ஒரு சிறந்த ஆவணம். சமகால வரலாற்று எழுதுதலில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கும் சூழலில், 50 ஆண்டுகளுக்கு முன்பே தமது ‘தினகரன்’ நாளிதழில் ஆதாரப்பூர்வமாக கலவரத் தகவல்களை எழுதி, புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எனவே, இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை உறிதிசெய்யப்பட்டுள்ளதாகக் கொள்ளமுடியும். முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதியர் நிகழ்த்திய வன்கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக விளக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் தினகரன், ‘கலவரத்துக்கு வித்திட்ட’ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்ற தகவல், அவரது நேர்மையுள்ளத்தையும், மனித நேயத்தையும் கூர்மையாக உணர்த்துகிறது.

சாதீய ஒதுக்கல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளபோதும், தலித்துகளின் போராட்ட செயல்பாடுகளை முதல் முறையாக அமைப்பு ரீதியாக ஒருங்கமைத்தவர் இம்மானுவேல் தேவேந்திரன் ஆவார். இம்மானுவேலரை சிறப்பாக அறிமுகப்படுத்தும் புத்தகம் ‘சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்.’ தமிழவேள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள இப்புத்தகம், தலித் அரசியல் வாசிப்பில் ஒரு முக்கியப் புத்தகமாகும்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிலுள்ள செல்லூர் என்ற கிராமத்தில் தேவேந்திரர் (பள்ளர்) சாதியைச் சேர்ந்த சேது வாத்தியாருக்கும், ஞானசௌந்தரிக்கும் 09..10.1924 அன்று இம்மானுவேல் பிறந்தார். சேது வாத்தியார் கிறித்துவத்தைத் தழுவி வேதநாயகம் ஆனார். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியதால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். பள்ளிக் கல்வி முடித்த இம்மானுவேல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதம் சிறை சென்றுள்ளார். பின்னர் ஆயுதப் பலத்துடன் வெள்ளையரை விரட்டும் எண்ணத்துடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேரமுயன்றார். அதற்குள் நேதாஜி இறந்துவிட்டதால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், அமிர்தம் கிரேஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் மீண்டும் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவப் பணியில் இருந்து விடுப்பில் திரும்பியபோது  முதல் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்திருந்தது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவருக்கு வாக்களிக்காத பிற சாதியினர் மீது மறவர்கள் வன்முறையை ஏவி வந்தனர். இதில் பெரிதும் தேவேந்திரர் சாதி தலித்துகள் அதிகம் பாதிக்கப்படனர். இம்மானுவேல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பள்ளர்களின் அச்ச உணர்வைப் போக்கினார். நிலைமை மேலும் மோசமடையவே, இராணுவத்துக்குத் திரும்பாமல் முழு நேர சமூகப்போராளியானார். இதனால் அச்சத்தில் இருந்த மக்கள் இம்மானுவேல் தலைமையில் அணிதிரன்டனர். பள்ளர் சமூகத்தினரிடையே சமத்துவ உரிமை ஏற்பட உழைத்தார். தேவேந்திரர் குலச் சங்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் ஆகியவற்றின் பொருப்புகளை ஏற்றார். குறிப்பாக இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடினார். கக்கன் போன்றவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், இம்மானுவேலின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் வழங்கவில்லை. என்றாலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கட்சி அரசியலையும் பள்ளர்களுக்கு உதவும் நோக்கிலேயே பயன்படுத்தினார் என்று தெரிகிறது. தலித்துகளுக்கு எதிராக தேவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து தலித்துகளைக் காப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். இதனால் பள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் பதிலடி அதிகமாக  இருந்தது. இத்தருனத்தில்தான் இம்மானுவேல் கொலைசெய்யப்பட்டார்.

இம்மானுவேலின் போராட்ட வாழ்க்கையை விரிவாகக் கூறும் இப்புத்தகம், தென் மாவட்டங்களின் சமூகச் கூறுகள் பற்றியும், அவருக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வந்துள்ளது குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. ஆதித்தமிழர்களான பள்ளர்களும், நாடார்களும், மறவர்களும் நிலங்களிலும், களங்களிலும் ஒன்றுமையாக வாழ்ந்த காலங்களையும், உடமையாளர்கள், ஆதிக்கசக்தியனரால் ஒடுக்கப்பட்ட செய்தியையும் மறக்காமல் பதிவு செய்துள்ளது. முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்துடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் ‘ சமூகப் போராளி இம்மாணுவேல் தேவேந்திரன்’ ஆகும்.

முதுகுளத்தூர் கலவரம், இம்மானுவேல் சேகரன் வாசிப்புகளின்போது குற்றப்பரம்பரைச் சட்டம் குறித்த வாசிப்பும் தவிர்க்க இயலாததாகிறது. ரேகைப் பதிவுச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம் மறவர், கள்ளர், குறவர், ஒட்டர், வன்னியர் உள்ளிட்ட பல பிற்ப்பட்ட சாதியினரை குற்றப்பரம்பரையாக அரிவித்தது. இச்சட்டத்தின் கீழ்வரும் இச்சாதிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தாம் குற்றத்தில் ஈடுபவில்லை என்பதை நிருபிக்க ஒவ்வொரு நாள் இரவிலும் காவல் நிலையம் சென்று ரேகை பதித்து, இரவு முழுவதும் அங்கேயே படுக்க வேண்டும். இச்சட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மறவர்கள். இச்சட்டத்தின் கீழ் மறவர்குல மக்கள் கேவலமாக நடத்தப்பட்டனர். பென்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். ஆண்களும் மானமிழந்து வாழ நேர்ந்தது.  மறவர்களின் உயிரும், வாழ்க்கையும் போலிஸ் அதிகாரிகள் பிடியில் இருந்தது. இதை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி அச்சட்டத்தை ஒழித்தனர். இத்தகைய பிற்படுத்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவினர் தலித்துகள் என்று வரும்போது இந்து சனாதனவாதிகள் போல் நடந்துகொண்டுள்ளனர்.  தாம் மேலே இருந்து மிதிபட, மிதிபட தமக்கு கீழே இருப்பவர்களை மிதித்தொழிப்பதே வருணாசிரம சுரண்டல் முறை. இதனை அன்னிய ஏகாதிபத்தியமும் நன்குணர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டது. அது சுதந்திர இந்தியாவில் திண்ணியங்களாகவும், மேலவளவுகளாகவும், தென்மாவட்டக் கலவரங்களாகவும் தொடர்கின்றன. இச்சுழலில் மேற்கூறிய இரு புத்தகங்களின் வாசிப்புகள் முக்கியம் பெருகின்றன.

நன்றி: புத்தகம் பேசுகிறது

4.00 avg. rating (80% score) - 4 votes

We place these articles at no charge on our website to serve all the people who cannot get access to it where they live and for transmit information.We dont gain any monetary benefits by publishing articles.Thank you very much.

Article Posted by

Social Media Auto Publish Powered By : XYZScripts.com