The Social Science Collective

இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும் எழுதியவர் : கலாநிதி ந. முத்து மோகன்

Article

கடந்த இருபது ஆண்டுகளில் இந்து மதம் குறித்த ஆய்வுகள் சில புதிய தளங்களை நோக்கி நகர்ந்துள்ளன. அவை குறித்து ஒரு கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. ஆய்வுத்தளங்களில் என்ன நடந்திருக்கிறது என்று கணக்கெடுத்துக் கொண்டால்தான் அவற்றை நாம் அரசியலாக்க முடியும். இந்துத்துவம் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்துவரும் சூழலில், மாற்று அரசியலுக்கு நாம் தயாராகவில்லை எனில் தோல்வியடைய நேரிடும்.
சமீப காலங்களில் இந்து மதம் குறித்து நடந்துள்ள ஆய்வுகளில் பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்ற சிந்தனைப் போக்குகளின் செல்வாக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. 1980 களுக்குப் பிறகு மேற்கு நாடுகளில் பல மார்க்சியர்களும் கூட பின்னை நவீனத்துவ வகைப்பட்ட சிந்தனைகளை உள்வாங்கியே செயல்பட்டு வருகிறார்கள். அதுபோல மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்கச் சிந்தனையாளர்கள் மேற்கத்தியச் சூழல்களில் தமது சொந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த பின்னைக் காலனியத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். 1960-80 களில் இந்து மதம், இந்தியத் தத்துவங்கள் குறித்த ஆய்வுகளில் மார்க்சியம் (தேபி பிரசாத் சட்டோபாத்யாயா, கே. தாமோதரன், சர்தேசாய் போன்றோரின் தத்துவ ஆய்வுகளும் ரொமிலா தப்பார், இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.சர்மா, கே.என்.பணிக்கர் போன்றோரின் வரலாற்று ஆய்வுகளும் இவற்றில் முக்கியமானவை) வழங்கிய உந்துதல்களுக்குப் பிறகு இப்போதைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன. அவற்றில் சில போக்குகளுடனாவது இக்கட்டுரையில் அறிமுகம் ஆகிக் கொள்ள முயலுவோம்.
இந்து மதம் என்ற காலனியச் சொல்லாடல்
இந்தியாவில் மதம் குறித்த புதிய அக்கறைகள் காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து தீவிரப்பட்டன. மதம் குறித்த அந்தப் புதிய அக்கறைகள் உண்மையில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்திய மக்கள் அப்படியொன்றும் மதம் சம்பந்தமாக குறிப்பான அக்கறைகள் கொண்டவர்கள் அல்ல. இந்தியர்களில் 70-80 சதவீதத்திற்கு மேலான மக்கள் மிக எளிய, சாதாரணமான மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள். அந்த நம்பிக்கைகளும் ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், கூட்டத்துக்கு கூட்டம் வேறுபடக் கூடியவை. ஒரு சிறு குத்துக்கல், ஆண்டுக்கு ஒருமுறை பந்தல் போட்டு, ஆடு கோழி பலியிட்டு அல்லது பொங்கல் வைத்து, ஏதோ ஒரு பழைய நம்பிக்கையோடு, இரண்டு நாட்கள் கூடி இருந்து திருவிழா கொண்டாடிவிட்டு, அதோடு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது, இப்படித்தான் இந்தியர்களின் மத நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வந்துள்ளன. இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு பத்து ஊர் சனங்களைக் கூட்டி அல்லது தமிழ்நாட்டு அளவில், இந்திய அளவில் ஒரு பெயர்வைக்கவேண்டும் என்று கூட யாரும் நினைத்தது கிடையாது.
மாறாக, நம்மை ஆளவந்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களின் மதம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்தியர்களின் மதம் யாது? அவர்களின் புனித நூல் எது? பாவம், புண்ணியம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் என்ன? இந்திய மக்களின் கடவுளர்கள் யாவர்? இந்த மக்களின் வழிபாட்டு முறை யாது? அதன் இறையியல் யாது? போன்ற கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் கேட்ட கேள்விகளெல்லாம் அவர்களின் சொந்த மதம் குறித்தவை. காலனிய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஐரோப்பாவில் குறிப்பிட்ட அக்காலத்தில் கத்தோலிக்கம் ஓரம்கட்டப்பட்டு, புரோட்டஸ்டன்ட் கிறித்தவம் நிலைகொண்டிருந்தது. அவர்களுக்குக் கிறித்தவ மதத்தைப் பற்றி நன்கு தெரியும். பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியர்களின் மதம் பற்றி ஐரோப்பியர்கள் குறிப்பிட்ட சில கேள்விகளை எழுப்பினார்கள், ஆனால் அந்தக் கேள்விகளே ஐரோப்பியக் கேள்விகளாக இருந்தன. அல்லது அந்தக் கேள்விகள் கிறித்தவக் கேள்விகளாக இருந்தன. இந்தியர்களின் தன்னிச்சையான மதநம்பிக்கைகளும் பல்வேறுவிதமான வழிபாட்டு முறைகளும் அந்த ஐரோப்பியக் கேள்விகளுக்குள், கிறித்தவ கேள்விகளுக்குள் அடங்க மறுத்தன. அடங்க மறுத்தால் விட்டு விடுவதா, என்ன? இந்தியர்களின் மதநம்பிக்கைகள் குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி அவற்றை ஐரோப்பியர்கள் “ஒழுங்குபடுத்த” ஆரம்பித்தனர். யாரிடமிருந்து தகவல்களைத் திரட்டினார்கள்? எந்தத் தகவல்களைச் சேகரித்தார்கள்? எப்படி ஒழுங்குபடுத்தினார்கள்? தகவல்களை ஒழுங்குபடுத்துதல் என்றால் என்ன? பிரச்சினை இப்போது பெரிதாகி விட்டது.
கடந்த 20-30 ஆண்டுகளாக இந்து மத உருவாக்கம் குறித்த மறுபரிசீலனைகள் தீவிரப்பட்டு வருகின்றன. காலனி ஆட்சிக் காலத்தில் காலனி ஆட்சியின் நிர்வாகத் தேவைகளுக்காக, ஐரோப்பியர்களால், கிறித்தவமதத்தின் சாயையில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே இந்து மதம் என்ற கருத்து இப்போது வலுவடைந்து வருகிறது. அது புறத்தே இருந்து உட்செலுத்தப்பட்ட கருத்தாக்கமே தவிர சொந்த அடிப்படைகளிலிருந்தே சுயமாக உருவான பெயர் அல்ல என்று இப்போது எழுதுகிறார்கள். இந்து மதம் என்ற சொல், அதன் பயன்பாடு ஆய்வாளர்களிடம் மட்டுமே உள்ளது என்று சிலர் கருதுகிறார்கள்.
எட்வர்ட் சையத்: கீழைத்தேயவியம்
1979 ல் எட்வர்ட் சையத் என்ற பாலஸ்தீனியச் சிந்தனையாளர் (இவர் இஸ்லாமியர் அல்ல) “கீழைத்தேயவியம்” (Orientalism) என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். மேற்குநாடுகளின் பல்கலைக்கழகங்களில் கீழைநாடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்ட துறைகளுக்கு “கீழைத்தேயவியல் துறைகள்” (Oriental Studies) என்று பெயர். அதாவது அரேபியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வரலாறு, பண்பாடு, மதங்கள் யாவை? அந்த மக்களின் நம்பிக்கைகள், ஒழுக்கங்கள் யாவை? அவர்களின் மனோபாவங்கள் என்ன? என்பவை குறித்து ஐரோப்பிய அறிஞர்கள் ஆராய்ச்சி செய்யும் துறைகள் அவை. கீழைநாட்டு மக்களைக் குறித்த அறிவுத் தொகுதிகள் இத்துறைகளில் மேற்கத்திய அறிஞர்களால் உற்பத்தி (Production of Knowledges) செய்யப்படுகின்றன. இந்த அறிவுத் தொகுதிகளை எட்வர்ட் சையத் கேள்விக்கு உள்ளாக்கினார். மேற்கத்திய நாடுகளின் அளவுகோல்களைக் கொண்டு கீழைநாட்டு மக்களின் வாழ்க்கை முறையை அளக்க முடியுமா? இஸ்லாம் குறித்து, இந்து மதம் குறித்து, பௌத்தம் குறித்து மேற்கத்திய சிந்தனையாளர்கள் உருவாக்கிப் பரப்பியுள்ள கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மையானவை? காலனிய ஆட்சிக்கும் மேற்குநாடுகளின் கீழைத்தேயவியல் ஆய்வுகளுக்கும் இடையிலான உறவு என்ன? ஆட்சி அதிகாரத்துக்கும் அறிவு உற்பத்திக்கும் உள்ள உறவு யாது? எட்வர்ட் சையத் எழுப்பிய பல கேள்விகள் பின்னை நவீனத்துவ சிந்தனையாளரான மீஷல் ஃபூக்கோ எழுப்பிய கேள்விகளோடு தொடர்பு கொண்டவை.
காலனிய இந்துமதம் குறித்த சில கேள்விகள்
எட்வர்ட் சையத், மீஷல் ஃபூக்கோ போன்றோர் எழுப்பிய கேள்விகள் இன்னும் அதிக தீவிரத்துடன் இப்போது இந்து மதம் குறித்து எழுப்பப்படுகின்றன. காலனிய ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டதாக இந்துமதம் உருவாக்கப்பட்டது என்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1) இந்து மதம் எனில் அது வேதங்களை முதல் நூலாகக் கொண்டது. 2) வேதங்களில் தொடங்கி வேதாந்தமாக விரியும் சிந்தனையே இந்து மதத்திற்கான தருக்கபூர்வமான இறையியலை வழங்கியது. 3) கர்ம வினை- மறுபிறப்பு- முக்தி என்ற கோட்பாட்டுத் தளத்தைக் கொண்டது இந்துமதம். 4) ஆன்மீகவாதம் (Spiritualism) என்பது அதன் அடிப்படைப்பண்பு. இந்து மதத்தில் ஏராளமான மறைஞானக்கூறுகள் (Mysticism) உண்டு. 5) இந்துமதம் சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஐந்து பண்புகளையும் இப்போதைய சிந்தனையாளர்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகின்றனர்.
மேற்குறித்த ஐந்து பண்புகளின் ஊடாகத் தொழில்படும் சில கருத்தாக்கங்களை முதலில் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். மதம் என்றாலே ஒரு முதல்நூலைக் கொண்டிருக்க வேண்டுமா? இது கிறித்தவத்தை முன்மாதிரியாகக் கொண்ட கருத்தாக்கம் அல்லவா? புனித நூல் அடிப்படை என்பதே ஓர் இந்தியக் கருத்தாக்கமாகத் தெரியவில்லையே! வேதங்கள் என்பன ஒரே நூலா? இல்லையே! பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் புத்தர், மகாவீரர் ஆகியோரின் நூல்களைப் பயிலுகின்றன, விளக்கம் அளிக்கின்றன; ஆயின் புனித நூல் என்ற அந்தஸ்து அந்நூல்களுக்கு வழங்கப்படுவது கிடையாது. வைதீக நூல்களாக வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகியன சொல்லப்படுகின்றன. வேதங்களுக்குக் குறையாத மரியாதை கொண்டதாக பகவத் கீதையைக் கொள்ளும் வழக்கமும் உள்ளது. இவற்றில் எதனை முதல் நூலாகக் கொள்ளுவது? சரி, வேதங்களும் பகவத் கீதையும் எத்தனை சதவீத இந்துக்களுக்குப் புனித நூலாக உள்ளது?
வேதங்களுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிந்து வெளி நாகரீகம் என்ற ஒன்று மிக வளர்ச்சியடைந்த வடிவில் பரந்துபட்ட ஒரு நிலப்பரப்பில் இருந்து வந்திருக்கிறது. சிந்து வெளி முத்திரைகளில் யோகி ஒருவரது உருவமும் சில பெண்தெய்வங்களின் உருவங்களும் காணப்படுகின்றன. சிந்து வெளியிலிருந்தே இந்து மதம் தொடங்குகிறது என ஏன் கொள்ளக்கூடாது? இன்றுவரை இந்தியக் கிராமப்புறங்களில் வழங்கி வரும் வழிபாட்டு முறைகள் சிந்து வெளி நம்பிக்கைகளை ஒட்டியே அமைந்துள்ளன.
வேதாந்தம் இந்து மதத்திற்கான தருக்கபூர்வமான இறையியலை வழங்குகிறது என்பதும் பிரச்சினைக்குரிய ஒரு கருத்தாக்கம். ஒவ்வொரு மதத்திற்கும் ஓர் இறையியல் (Theology) உண்டு என்பதே ஒரு மேற்கத்திய கருத்தாக்கம். கிறித்துவ மதம் தோன்றியபோது அதற்கு ஓர் இறையியல் தோன்றியிருக்கவில்லை. அது பின்னாட்களில் கிரேக்கத் தத்துவத்தை உள்வாங்கி ஓர் இறையியலை உருவாக்கிக் கொண்டது. கிறித்தவத்திற்கும் கிரேக்கத் தத்துவங்களுக்கும் என்ன உறவு? என்பது இன்றுவரை நிறுவப்படவில்லை. அவை இரண்டும் தொடர்பற்ற வேறுவேறான சிந்தனைகள். வேதாந்தம் என்பது வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் அல்ல, அது உபநிடதங்களுக்கு குறிப்பிட்ட ஒரு விதத்தில் விளக்கமளிக்கும் தத்துவம், அவ்வளவுதான். மீமாம்ச தத்துவம் வேதாந்தத்தை விட அதிக அளவுக்கு, முழு அளவுக்கு வேத அடிப்படைகளை ஏற்கக்கூடியது. இன்னொரு புறம், வைதீக மரபினர் இந்திய வரலாற்றில் எந்த ஒரு கட்டத்திலுமே இந்து மதம் என்ற ஒன்றுக்கு இறையியலை அல்லது தத்துவ அடிப்படையை வழங்கவேண்டியது தமது கடமை என்று கருதியது கிடையாது.
இந்தியத் தத்துவங்களில் வேதாந்தத்தை முதன்மைப்படுத்துவதில் ஓர் உள்நோக்கம் இருப்பதாகப் படுகிறது. வேதாந்தத்தைத் தவிர இந்தியத் தத்துவங்களில் வேறு எதுவுமே அடிப்படையில் இறைச்சார்பு கொண்டவை அல்ல. வேதங்களை ஏற்கும் மீமாம்சம் கூட கடவுட் கொள்கையை ஏற்காது. மதங்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படும் பௌத்த-சமணமும் இறைச்சார்பு கொண்டவையல்ல. வைசேடிகமும் நியாயமும், சாங்கியமும் யோகமும் நேரடியாக இறைத்தத்துவங்கள் அல்ல. கறாராகச் சொல்லுவதானால், வேதாந்தம் கூட இறைக்கோட்பாட்டை ஏற்கக்கூடியது அல்ல. ஆயின் வேதாந்தத்தின் பிரம்மம் என்ற கோட்பாட்டை இறைவனுக்கு இணையாகச் சமப்படுத்தினால் அது ஓர் இறையியல் போன்ற தோற்றத்தை அளிக்கும். வேதங்களை முதல் நூலாகக் கொண்டு ஒரு மதத்தை உருவாக்கவும், அதற்கு ஓர் இறையியலை வழங்கும் தத்துவத்தை அடையாளப்படுத்தவும் காலனிய ஆட்சிக்காலத்தில் ஒரு திட்டமிட்ட முயற்சி நடந்திருக்கிறது என்றே இந்நிலையில் நாம் சொல்லவேண்டியுள்ளது. வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்தம் என்ற சேர்க்கையும் சமயச் சார்பற்ற சுதந்திரமானத் தத்துவங்களைப் புறக்கணிக்கும் போக்கும் காலனியக்காலச் சிந்தனையில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தத்துவங்களை மதங்களுக்கு ஆட்படுத்தும் ஒரு கருத்தியல் வேலை செய்திருக்கிறது.
கர்மவினை-மறுபிறப்பு-அவற்றிலிருந்து முக்தி என்ற வேலைத்திட்டமும் கிறித்தவ சமயத்தின் முதற் பாவம்-பாவத்தின் தண்டனையாகப் பூமியில் பிறப்பு-பாவமன்னிப்பு-ரட்சிப்பு என்ற வேலைத்திட்டத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. எல்லா வகையிலும் கிறித்தவம் போன்ற ஒரு மதத்தையே மேற்கத்திய அறிஞர்கள் தேடியிருக்கிறார்கள். சார்வாகத்தின் பஞ்சபூதவாதமும், சாங்கியத்தின் பிரகிருதிவாதமும், வைசேடிகத்தின் பதார்த்தவாதமும், சமணத்தின் அணுக்கொள்கையும் பொருளுலகம் பற்றிய மிக விரிந்த அற்புதமான கோட்பாடுகளைக் கொண்டனவாக விளங்குகின்றன. நியாயமும் மீமாம்சமும் மொழியியல், தருக்கவியல், அழகியல் ஆகியவை குறித்துப் பேசுகின்றன. இவையெல்லாம் ஒரு மதத்தை நியாயப்படுத்தும் தத்துவங்களே அல்ல. மாறாக வேதாந்தம் மட்டும் தான் தத்துவார்த்தரீதியாக மிகவும் வெளிறிப்போன ஜீவாத்மா-பரமாத்மா ஒற்றுமையைப் பேசுகிறது. தத்துவம், தருக்கம், மெய்ப்பொருள் என்ற நோக்குகளிலிருந்து எத்தனையோ வலுவான சிந்தனைகள் இந்திய மரபில் இருக்கும்போது வேதாந்தத்தைப் பெரிதுபடுத்திக்காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்ற சந்தேகமே இங்கு வலுக்கிறது.
இந்துமதத்தின் மீது ஆன்மீகவாதம், மறைஞானம் இன்னும் ஓரிறைக் கொள்கை, உருவமில்லாத அப்பாலைச் சிந்தனை போன்ற ஐரோப்பியக் கருத்தாக்கங்களைத் திணிப்பதையும் ஆட்சேபிக்க வேண்டியுள்ளது. ஆன்மீகவாதம் என்பதன் ஆங்கிலச் சொல் Spiritualism என்பது. கிறித்தவத்தின் மூன்று உண்மைகள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி (God, Son and Spirit) ஆகியவை ஆகும். இவற்றில் மூன்றாவதாகச் சொல்லப்படும் பரிசுத்த ஆவியை அடிப்படையாகக் கொண்டு மேற்கில் வளர்க்கப்பட்டதுவே Spiritualism என்ற கோட்பாடு. கிறித்தவத்தின் சூழலில் பரிசுத்த ஆவிக்கு ஒரு பிரத்தியேகப் பாத்திரம் உண்டு. ஆயின் இக்கருத்தாக்கத்தோடு எந்த வகையிலும் சேராத இந்து மதத்திற்கு அதனைப் பொறுத்துவது எப்படி? இதுபோன்றதே மறைஞானம் என்ற சொல்லாக்கமும். ஐரோப்பியச் சூழல்களில் அறிவொளி இயக்கம், பகுத்தறிவுவாதம், விஞ்ஞானவாதம் ஆகியவற்றில் அதிருப்தி அடைந்திருந்த ஒரு பழமைவாதக் கூட்டத்தினர் இந்திய மதங்களிலும் தத்துவங்களிலும் அவர்களுக்கு ஆறுதலான சில மறைஞானக் கூறுகள் இருப்பதாக நம்பினர். அங்கே தொலைத்ததை அவர்கள் இங்கே தேடினார்கள். ஆன்மீகவாதம், மறைஞானம், பிரம்மஞானம் (Theosophy) போன்ற சொற்களை இந்தியத் தத்துவங்களுக்குள் திணித்தவர்கள் இவர்கள்தான்.
இறுதியாக, இந்துமதத்திற்கும் சாதி அமைப்புக்கும் இடையிலான உறவு குறித்தும் இப்போது சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு வகையில் பார்த்தால் இந்து மதம் என்ற கட்டமைப்பே இல்லாத சூழல்களில் பல நூற்றாண்டுகளாக சாதி அமைப்பு பல்வேறு வட்டாரங்களில் அவ்வட்டாரங்களின் வேறுபாடுகளுடன் சுயமாக வழங்கி வந்துள்ளது. ஆயின் காலனியச் சூழல்களில் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் ஆலோசகர்களாக விளங்கிய பிராமணர்களே ஒரு வைதீக இந்துமதத்தையும் அதன் புரோகிதர்களாகத் தம்மையும் உருவகித்துக் காட்டியுள்ளார்கள். இந்துமதத்தின் புரோகிதக் காவலர்கள் என்ற சித்திரத்தைத் தீட்டும் முயற்சியில் அவர்கள் சாதிப்படிநிலையையும் அதன் தீவிர வடிவத்தில் மீட்டுருவாக்கியுள்ளார்கள். இந்த மீட்டுருவாக்கத்தில் அது ஓர் ஒற்றைப்பண்பையும் ஈட்டியுள்ளது. ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில், இந்தியச் சாதி அமைப்பு இந்தோ-ஐரோப்பிய ஆரிய இனத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான சமூக அமைப்பின் முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. நடைமுறைத்தளத்தில் இந்தியச் சாதி அமைப்பை ஐரோப்பியர்கள் அவர்களது சொந்தச் சமூகத்தின் வெள்ளையர்/கறுப்பர் இன(Race)வேறுபாட்டின் ஊடாகவே உருவகித்துக் கொண்டார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டியுள்ளது.
காலனிய இந்துமதமும் தேசியவாத அறிவாளிகளும்
மேலே குறிப்பிட்ட வகையில் காலனிய ஆட்சிக்காலத்தில் இந்துமதத்தை உருவாக்கியவர்கள் யார்? என்ற கேள்விக்கு இன்னும் நமக்கு முழுமையாகப் பதில் கிடைக்கவில்லை. காலனிய அதிகாரிகள், கிறித்தவ மிஷனரிமார்கள், மேற்கத்திய அறிஞர்கள் என்ற ஒரு தோராயமான பதில் கிடைக்கிறது. இந்த மூவகைப்பட்டவர்களுக்கும் தகவலாளர்களாக விளங்கிய உள்ளூர் மேட்டுக்குடியினர், குறிப்பாக பிராமணர்கள் என்ற அடுத்த பதிலும் கிடைக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் புதிதாகக் கிடைத்த அதிகாரத் தொடர்புகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள, இந்துமதத்தின் மிகப்பழமையான புரோகிதச் சாதியாக அவர்கள் தம்மைச் சித்தரிக்கொண்டதில் வியப்பு எதுவும் இல்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் மதம் என்ற வாகனமே அவர்களுக்கு அந்தஸ்தை ஈட்டிக்கொடுக்கும். பிராமணர்களின் புனித அந்தஸ்து இந்துமதம், சாதி அமைப்பு ஆகியவற்றின் இறுக்கத்துடன் தொடர்பு கொண்டதாகத்தான் இந்நிலையில் நமக்குத் தென்படுகிறது.
இவை ஒருபுறமிருக்க, மாக்ஸ் முல்லர், பால் டெய்சன், ஓல்டென்பெர்க் வகைப்பட்ட ஜெர்மானிய கீழையியவாதிகளின் பாத்திரம் தனித்த ஆய்வுக்குரிய ஒன்றாக முன்நிற்கிறது. ஐரோப்பிய ஆரியர்களின் தூயவடிவினராகத் தங்களைக் கருதிக் கொண்ட ஜெர்மானியர்கள் தமது வரலாற்று முன்னோடிகளாக இந்திய பிராமணர்களைக் கருதினார்கள் என்பதைக் காண்கிறோம். இந்தோ ஐரோப்பிய ஆரியர்களின் முதல்மொழியாக இவர்கள் சமஸ்கிருத மொழியைச் சித்தரிக்கின்றனர். கிறிஸ்துவுக்கு முந்தியவர்களாக வரலாற்று வரிசையில் யூதர்கள் சொல்லப்படுவதை அடியோடு வெறுத்தவர்கள் ஜெர்மானியர்கள். எனவே சமஸ்கிருத மொழியில்தான் முதலில் கடவுள் பேசினார் என யூதர்களுக்கு முந்தியவர்களாக பிராமணர்களை இவர்கள் சித்தரித்து மகிழ்ந்தனர். அது கடவுளின் மொழியாக இருப்பதால்தான் இத்தனை முழுமையான (Perfect) இலக்கணத்தைக் கொண்டுள்ளது என ஜெர்மானிய அறிஞர்கள் எழுதி மகிழ்ந்தனர். காலனிய ஆட்சிக்காலத்தில் இந்துமத உருவாக்கத்தில் ஜெர்மானிய அறிஞர்களின் ஆரியக் கோட்பாடு முக்கியப்பாத்திரம் வகிக்கிறது. ஜெர்மானிய அறிஞர்களின் அன்றைய எழுத்துக்கள் இந்து மதத்தையும் வேதாந்தத் தத்துவத்தையும் கறாராக வரையறுத்துக் காட்டியதில் “விஞ்ஞானரீதியான” பாத்திரத்தை வகித்தன எனச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆரியம் குறித்த அந்த கருதுகோள் இந்தியச் சூழலில் மட்டுமின்றி ஐரோப்பியச் சூழலிலும் ஓர் அரசியல் விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்று இன்று புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்துமத உருவாக்கத்தில் அன்று ஈடுபட்ட ஓர் உள்நாட்டு சக்தி இந்தியாவின் தேசியவாத அறிவாளிகளாகும் (Nationalist Elites). இந்திய தேசியவாத அறிவுத்துறையினர் குறித்த விமர்சனங்களைக் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் அணியினர், திராவிட இயக்கத்தார் போன்றோர் முன்பே உருவாக்கியிருந்தனர் என்ற போதிலும் சமீபகாலங்களில் அவ்விமர்சனத்தைக் கோட்பாட்டுரீதியாக வளர்த்தெடுத்தவர்கள் ரணஜித் குகா தலைமையிலான அடித்தளமக்கள் வரலாற்றுக் (Subaltern Historians) குழுவினர் ஆகும். அடித்தளமக்கள் வரலாற்றுச் சிந்தனை இப்போது புதுமார்க்சியம் மற்றும் பின்னைக்காலனியத்தின் முக்கிய உறுப்பினமாகச் சேர்ந்துகொள்கிறது.
அன்றைய வங்காளத்தின் படித்த நடுத்தரவர்க்கத்தினர் (பத்ரலோக்) ஆங்கிலேயருக்கும் இந்திய மக்களுக்கும் “நடுவில், இடையாட்களாக” (Middlemen) வேலைசெய்தனர் என ஓர் ஆய்வாளர் எழுதுகிறார். இந்திய தேசிய அறிவாளிகள் இந்திய மக்களிடமிருந்து பெரிதும் அந்நியப்பட்டிருந்தனர் என அடித்தள வரலாற்றாசிரியர்கள் எழுதுகின்றனர். படிப்பறிவில்லாத இந்திய விவசாயிகளை அவர்கள் அராஜகவாதிகளாகவும் சந்தேகத்திற்குரியவர்களாகவும் கருதினர். சாதாரண மக்களை இழிவானவர்களாகக் கருதும் மேட்டிமைத்தனம் இவர்களிடம் இருந்தது. இன்னொருபுறம் இந்தியா குறித்த கீழைத்தேயவாதிகளின் கருத்துக்களை அவர்கள் ஒப்புதலுடன் நோக்கினர். ஆளும்வர்க்கத்தின் கருத்துக்களை வியப்புடன் நோக்கும் பண்பு அவர்களிடம் இருந்தது. வெள்ளைக்காரர்களைவிட அதிக வெள்ளைக்காரர்களாக நம்மவர்கள் தம்மைக் காட்டிக்கொண்டார்கள். பிரான்ஸ் ஃபனோன், “கறுப்புத் தோல், வெள்ளை முகமூடிகள்” என்று எழுதியது இவர்களைத்தான். ஆளும் வர்க்கத்தினரின் கருத்தியலை ஆளப்படுவோர்களில் ஒருபகுதியினர் தம்முடையதாகவே எடுத்துக்கொள்கின்றனர் (Hegemony) என்று அந்தோனியோ கிராம்சி எழுதியதையும் இங்கு நினைவில் கொள்ளுவோம். காலனிய ஆட்சியாளர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் ஓர் “ஒட்டு ரகம்” (Hybrid) உருவாகியது என்று ஹோமி பாபா என்ற அறிஞர் இதுபற்றி எழுதுகிறார். (ஒட்டு ரகம், கலப்பினம் அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டவர்கள் என விரித்துக் கொள்ளலாம்). இந்த ஒட்டுரகத்தினர் தமது எஜமானர்களைப் “போலச்செய்து” காட்டினார்கள் (Mimesis, Mimicry) என்று பாபா சொல்லுகிறார்.
இவ்வகையான ஒட்டுரகத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் இந்துமதம் குறித்த மேற்கத்திய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தேசியவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர் என்ற கருத்து இந்நிலையில் தோன்றுகிறது. வேதங்களை முதன்மையாகக் கொண்ட இந்துமதம் என்ற ஓர் அகில இந்திய சித்திரம் ஒருங்கிணைந்த இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாக அவர்கள் நம்பினர். பொருளாற்றல்களில் ஆங்கிலேயரிடம் தோற்றுப்போன நாம் ஆன்மீகரீதியாக, மறைஞானத்தளத்தில் இன்னும் விஞ்சி நிற்பவர்கள்தாம் என்ற உணர்வு அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மிக முக்கியமாக இவர்கள் ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியாகத்தான் தம்மைக் கருதிக்கொண்டார்கள். அதாவது ஐரோப்பியர்களிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்ட தேசியவாதம் என்பது இந்தியாவின் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அரசியல் தத்துவம் என்றே அவர்கள் கருதினர். வேதாந்தத்தின் மாயாவாதம் காலனிய ஆட்சியாளர்களை உருவகமாகக் குறித்து நின்றதைவிட அதிகமாக “அராஜகத்தன்மை கொண்ட” இந்திய விவசாயிகளைத்தான் குறித்து நின்றது. அடித்தளமக்களின் சமூக உளவியல் இந்திய தேசியவாதிகளுக்கு எப்போதுமே புரிந்து கொள்ளப்படாததாகத்தான் இருந்தது என்று பார்த்தா சாட்டர்ஜி எழுதுகிறார். அது கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு, கருவியாகப் பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றாகவே அவர்களால் கருதப்பட்டது என்று அவர் கூறுகிறார். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளும்போதே நாம் இந்துமதம் குறித்த வேதாந்தச் சித்திரம் அன்று உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் புரிந்து கொள்ளமுடியும். இந்திய விவசாயிகள், மதச் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்றோரை நிராகரிப்பதற்கும் அல்லது அவர்களைத் தேவைப்படும் அளவில் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வசதியான தத்துவமாகவே வேதாந்தத் தலைமையிலான இந்திய தேசியம் அன்று உருவாக்கப்பட்டது என்பதைக் காணுகிறோம்.
பன்மீய இந்து மதம்
இந்து மதம் குறித்த மேற்குறித்த விவாதங்கள் மிக இயல்பாகவே இந்து மதம் குறித்த சில புதிய புரிதல்களுக்கு இட்டுச் செல்கின்றன. இந்து மதம் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. காலனிய காலத்துக்கு முன்னால் இத்தனை ஒருங்கிணைந்த வடிவில், தத்துவார்த்த ‘பந்தா’க்களோடு இந்து மதம் எப்போதுமே அதன் வரலாற்றில் வழக்கில் இருந்தது கிடையாது என்பதை இப்போது ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டு வருகிறார்கள். இன்றைய இந்து மதத்திற்கு முந்தியகால வரலாற்றோடு தொடர்புகள் இல்லாமலில்லை. ஆயின் அவை ஒற்றைப்படையானவை அல்ல, அவை பலதரப்பட்டவை. அது வேதங்களோடும் வேதாந்தத்தோடும் மட்டும் தொடர்பு கொண்டதல்ல. அது சிந்து வெளியோடும் தொடர்பு கொண்டது; அது பக்தியோடும் புராணங்களோடும் தொடர்பு கொண்டது; அது தாந்திரிகத்தோடும் தொடர்பு கொண்டது.
இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது. இந்து மதம் என்ற காலனிய ஒற்றை வடிவத்தில் மத அடிப்படைகளை விட அரசியல் அதிகார அடிப்படைகளே அதிகமாக அமைந்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டுமின்றி, நாட்டு விடுதலைக்குப் பிறகு, சமீபகாலங்களில் அது மிகவும் பிற்போக்குத்தன்மை கொண்ட பாசிச வடிவத்தை ஈட்டிவருகிறது என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இத்தகைய சூழல்களில்தான், இந்து மதம் என்ற சொல்லையே கைவிடவேண்டும் என்ற கருத்து முன்மொழியப்படுகிறது. அது அவ்வளவு எளிதல்ல எனில், இந்து மதம் என்பதற்கு சிற்சிலத் தொடர்புகளைத் தம்மில் கொண்ட பல மதங்களின் தொகுப்பு என்ற வரையறை முன்மொழியப்படுகிறது. ஆயின், யூதமதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியவை கூட தமக்குள் ஏராளமான தொடர்புகளைக் கொண்ட மதங்கள்தாம்; அதற்காக அவற்றை ஒரே மதம் என்றா வழங்குகிறோம்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்து மதம் என்பதைப் பன்மீயத் தன்மை கொண்ட மதமாக முன்னிறுத்தும்போது கிறித்தவம், இஸ்லாம் போன்ற ஒற்றைத்தன்மை கொண்ட மதங்களுக்கு அது ஒரு சவாலான முன்னுதாரணமாக வழங்கும் என்று சமீபத்தில் தடைசெய்யப்பட்ட நூலின் ஆசிரியரான வெண்டி டொனிகர் குறிப்பிடுகிறார். இந்து மதம் என்று இன்று சொல்லப்படும் அந்த மிகப்பெரும் தொகுப்பினுள் சிந்துவெளியும் வேதங்களும், வைதீகமும் அவைதீகமும், சாத்திரநூல்களும் வாய்மொழி வழக்காறுகளும், துறவறமும் காமமும், வன்முறையும் அகிம்சையும், இன்னும் என்னவெல்லாமோ சேர்ந்து கிடக்கின்றன. பரசுராமன் அவனது தாயின் தலையை வெட்டி எறிந்துவிட்டு, பின் மீண்டும் உயிர்ப்பித்த கதையை வெண்டி டொனிகர் அவரது நூல் முழுவதிலும் எடுத்தாளுகிறார். பரசுராமன் அவனது தாயின் தலையை வெட்டும்போது அவளது உடனிருந்த ஒரு பறையர் பெண்ணின் தலையையும் சேர்த்து வெட்டிவிட்டான். பிறகு தாயை உயிர்ப்பிக்கும் போது, அவசரத்தில்(!), தாயின் தலையையும் பறையர் பெண்ணின் உடலையும் (அல்லது தாயின் உடலையும் பறையர் பெண்ணின் தலையையும்) சேர்த்து ஒட்டிவிட்டான். இந்துமதம் முழுவதுமே அப்படிப்பட்டதுதான் என்கிறார் வெண்டி டொனிகர்.
இந்த நாட்டின் வரலாற்றில் உருவாகி வந்துள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும், குறிப்பாக சாதி அமைப்பும் ஆண்/பெண் ஏற்றத்தாழ்வுகளும், இந்து மதத்தினுள் கலந்து புரண்டு கிடக்கின்றன. அந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு அது அங்கீகாரம் வழங்குகிறது, இன்னொரு புறம் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறது. பெருவிரல் துண்டிக்கப்பட்ட ஏகலைவன், ராமனால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்புகன், அரக்கு மாளிகையில் எரித்துக் கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்ணும் அவளது ஐந்து பிள்ளைகளும் என்பது போன்ற பல கதைகள் அதன் புராணங்களில் புதைந்து கிடக்கின்றன. பிராமணர்களுக்கு அது முதன்மையான இடம் வழங்குகிறது என்பது ஒருபக்கத்தில் உண்மைதான், ஆனால் பிரம்மனுக்கு இந்தியாவில் கோயில் கிடையாது, பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் பலரைப் பீடித்திருக்கிறது, சிவன், ராமன், பரசுராமன், இந்திரன், இன்னும் பலருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டு. பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் பற்றி இந்துமத நூல்களில் ஏராளமாக வாசிக்கலாம், உண்மைதான். ஆயின் சத்யவதி, அம்பா, அம்பிகா, அம்பாலிகா, குந்தி, மாதுரி போன்ற பல பெண்களை அங்கு சந்திக்கவும் முடியும். இந்து மதத்தை நான் தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோரின் நோக்கிலிருந்து வாசித்து ஒரு மாற்றுவரலாற்றை எழுதுவேன் என்கிறார் வெண்டி டொனிகர்.
இப்படியாக..
பன்மீயம் என்பதையே இந்து மதம் குறித்த கடைசிச் சொல்லாக நாம் இங்கு முன்வைக்கவில்லை. அது ஒரு தற்காலிக நிலைப்பாடாக இருக்கலாம். ஆயின் காலனிய, நவீன இந்துமதம் குறித்த சில விவாதங்களையே இங்கு முன்வைத்துள்ளோம். இந்து மதம் குறித்து பல வேளைகளில் நாம் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வருகிறோம். அது சரியாக இருக்காது. பேசி விவாதிப்பதற்கான அழைப்பே இது.
இந்து மதம் குறித்த வாசிப்புகளுக்கு உதவக்கூடிய சில நூல்கள்:
Hinduism Reconsidered, Eds. Gunther D. Sontheimar & Hermann Kulke, Manohar, Delhi, 1989.
Richard King, Orientalism and Religion: Postcolonial Theory, India and ‘The Mystic East’, Routledge: London, 1999
ichard King, Indian Philosophy: An Introduction to Hindu and Buddhist Thought, ANE Books: Newdelhi, 2000
9.04.2014

0.00 avg. rating (0% score) - 0 votes

We place these articles at no charge on our website to serve all the people who cannot get access to it where they live and for transmit information.We dont gain any monetary benefits by publishing articles.Thank you very much.

Article Posted by

Please comment with your real name using good manners.

Leave a Reply

*

code

Social Media Auto Publish Powered By : XYZScripts.com